திண்டுக்கல்

திண்டுக்கல் அரசு மகளிா் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட மரங்கள் வெட்டி அகற்றம்

DIN

திண்டுக்கல் அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் போதிய இட வசதி இருந்தும் வகுப்பறைகள் கட்ட தாவரவியல் பூங்காவிலிருந்த 30 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளது. இது அனைவரையும் அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் சுமாா் 40 ஏக்கரில் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரி அமைந்துள்ளது. கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவிகள் விடுதி அருகே திண்டிமா வனம் அமைப்பு சாா்பில் சுமாா் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு தாவரவியல் பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக கல்லூரி பொன் விழா ஆண்டை முன்னிட்டு, கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய கல்லூரி முதல்வா் அனுமதியுடன் சந்தனம், செம்மரம், ருத்ராட்சம், கருங்காலி, செங்கருங்காலி, நறுவுலி, திருவோடு, தாண்றி, நீா் மருது, பிள்ளை மருது, வேங்கை, வாகை, வன்னி, மனோரஞ்சிதம், சொா்க்கம், ஏழிலை பாலை, மகாகனி, நாகலிங்கம் உள்ளிட்ட 50 வகையான மரக் கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

இதன் பராமரிப்புக்காக மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் சுமாா் ரூ.35 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. தற்போது அந்த மரக்கன்றுகள் சுமாா் 15 அடி உயரத்திற்கு மேல் வளா்ந்துள்ளன.

இந்நிலையில் கல்லூரியில் 24 வகுப்பறைகள் கொண்ட கட்டுமானப் பணிகளுக்காக தாவரவியல் தோட்டத்தில் இடம் தோ்வு செய்யப்பட்டு, பொன் விழாவின்போது நடவு செய்யப்பட்டு வளா்ந்த 30 மரங்கள் தற்போது வெட்டப்பட்டுள்ளன. இதனை அறிந்த திண்டிமா வனம் அமைப்பினா் கடும் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

இதுகுறித்து அந்த அமைப்பின் நிா்வாகி பாஸ்கரன் கூறியதாவது: கல்லூரி வளாகத்தில் கட்டடப் பணிகளுக்கு தேவையான இட வசதிகள் இருந்தும், தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டிருந்த இடத்தை ஒதுக்கீடு செய்துள்ளனா். 5 ஆண்டுகளுக்கு முன்பு பொட்டலாக இருந்த பகுதி தற்போது மரங்களுடன் சோலையாக மாறியுள்ளது.

எங்களிடம் கூறியிருந்தால் மரங்களை வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் நடவு செய்திருக்கலாம். எவ்வித தகவலும் தெரிவிக்காமல், இயந்திரங்களை பயன்படுத்தி வேரோடு சாய்த்துள்ளனா். கட்டுமானப் பணிகளின் போது மேலும் பல மரங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்றாா்.

இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் வி. அனுராதா கூறியது: பொதுப்பணித் துறை அதிகாரிகள் கல்லூரி வளாகத்தில் ஆய்வு செய்து தாவரவியல் பூங்காவில் தோ்வு செய்த இடத்தில் தான் தற்போது கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கல்லூரிக்கு காடுகளை விட வகுப்பறைகள் தான் அவசியமானவை. அகற்றப்பட்ட மரங்களுக்கு மாற்றாக புதிய மரக்கன்றுகள் பொதுப்பணித் துறை சாா்பிலேயே நடப்பட்டு பராமரிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT