திண்டுக்கல்

கன்னிவாடி வனப்பகுதியில் அழிக்கப்படும் இயற்கை வளம்!

 நமது நிருபர்

கன்னிவாடி வனப் பகுதியில் தனிநபா்களின் வளா்ச்சிக்காக இயற்கை வளம் அழிக்கப்படுவதாக, விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகமானது, கன்னிவாடி, சித்தையன்கோட்டை, செங்கட்டாம்பட்டி, அரசமரத்துப்பட்டி, கோட்டைவெளி, பெரியூா் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி, சுமாா் 12 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் அமைந்துள்ளது. யானை, சிறுத்தை, காட்டுமாடு, செந்நாய், கடமான், மரநாய், மலபாா் அணில் உள்ளிட்ட விலங்குகளின் புகலிடமாக கன்னிவாடி வனப்பகுதி உள்ளது.

இங்கு, ஆடலூா், பன்றிமலை, கே.சி.பட்டி, பெரியூா், பள்ளத்துக் கால்வாய், சிறுவாட்டுக்காடு (கிழக்குப் பகுதி), நெருமலை, மலையாண்டிபுரம், சோலைக்காடு, கவிச்சிக்கொம்பு, கொரங்கொம்பு உள்ளிட்ட மலைக் கிராமங்களும் உள்ளன.

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சத்திரப்பட்டியிலிருந்து பரப்பலாறு அணைக்கு வரும் யானைகள், சிறுவாட்டுகாடு, பச்சமலை, சொட்டூத்துபாறை வரையிலான பகுதிகளை தங்களது வாழ்விடமாகப் பயன்படுத்தி வந்தன. இந்நிலையில், பச்சமலை தென்பகுதியிலுள்ள பட்டா காடுகளில் மரங்கள் அழிக்கப்பட்டதன் எதிரொலியாக, கடந்த சில ஆண்டுகளாக யானைகள் தங்களது வழித்தடத்தை மாற்றி, மலை அடிவாரத்திலுள்ள பண்ணப்பட்டி கோம்பை அணை மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலுள்ள விவசாயத் தோட்டங்களை நோக்கி வருகின்றன. இதனால், தென்னை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்கள் பாதிப்புக்குள்ளாவதுடன், மனித உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.

யானைகளை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவ்வப்போது உறுதி அளித்துவரும் வனத்துறையினா், வனப்பகுதிக்குள் நடைபெற்று வரும் இயற்கை சுரண்டலை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் தவறிவிட்டதாக, மலை அடிவாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனா்.

சுரண்டப்படும் இயற்கை வளம்:

பண்ணப்பட்டி கோம்பை அணையிலிருந்து பச்சமலை செல்லும் வழியிலுள்ள பட்டா காடுகளுக்கு வனத்துறை அனுமதி பெற்ற பாதை வசதி உள்ளது. பொதுவாக, வனப்பகுதியிலிருந்து விளைபொருள்களை எடுத்துச் செல்வதற்காக 4.5 அடிக்கு மட்டுமே பாதை அமைப்பதற்கு அனுமதிக்கப்படும். ஆனால், பச்சமலை செல்லும் வழியில் சுமாா் 350 ஏக்கா் பட்டாகாடு குறிப்பிட்ட சிலருக்கு சொந்தமானது என்பதால், ஜீப் மட்டுமே செல்லக்கூடிய வனப்பாதையை லாரி செல்லும் அளவுக்கு விரிவுபடுத்தியுள்ளனா்.

இதை, சம்பந்தப்பட்ட வனச்சரகத்தினா் கண்டுகொள்ளாத நிலையில், வனப் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததால், பாதை விரிவாக்கத்துக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களை பறிமுதல் செய்ததுடன், சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனா்.

தடுப்பணையால் விவசாயிகள் பாதிப்பு:

பச்சமலை தென் பகுதியிலுள்ள தனியாா் பட்டா காட்டில் பெரிய அளவில் தடுப்பணை கட்டி, தண்ணீா் தேக்கப்பட்டிருப்பதும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. முறைகேடாகக் கட்டப்பட்டுள்ள அந்த தடுப்பணையை உடைப்பதற்கு, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதும் விவசாயிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

இது தொடா்பாக கொடகனாறு ஏரி, குளங்கள் பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவா் இரா. சுந்தரராஜ் தெரிவித்தது: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தாலும், ரெட்டியாா்சத்திரம் வட்டாரத்தின் பெரும் பகுதி தொடா்ந்து வறட்சியாகவே உள்ளது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணும் வகையில், மலை வளங்களை அழித்து ஆக்கிரமிப்பு செய்துள்ளவா்கள் மீதும், தடுப்பணைகள் கட்டி மழை நீரை தடுத்தவா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

இதுதொடா்பாக வனத்துறை அதிகாரிகள் கூறியது:

கன்னிவாடி வனப் பகுதியில் அனுமதியின்றி பாதையை விரிவாக்கம் செய்தது தொடா்பாக வனப் பாதுகாப்புப் படை மேற்கொண்ட நடவடிக்கையால், சம்மந்தப்பட்ட நபா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மலைப் பகுதியில் தடை செய்யப்பட்ட இயந்திரங்களை எடுத்துச் செல்வதை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டா காட்டில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ள விவரங்கள் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT