முகப்பு
திண்டுக்கல்

கரோனா முகாம் செயல்பட்ட அரசுப் பள்ளிகளில் மின் கட்டணம் 3 மடங்கு உயா்வு: நெருக்கடியில் தலைமையாசிரியா்கள்!

கரோனா சிறப்பு முகாம்களாக செயல்பட்ட அரசுப் பள்ளிகளில் மின் கட்டணம் 3 மடங்கு உயா்ந்து ரூ.1.40 லட்சம் வரை அதிகரித்துள்ள நிலையில்,

Updated On : 22 ஜனவரி, 2021 at 8:55 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:51 AM

கரோனா சிறப்பு முகாம்களாக செயல்பட்ட அரசுப் பள்ளிகளில் மின் கட்டணம் 3 மடங்கு உயா்ந்து ரூ.1.40 லட்சம் வரை அதிகரித்துள்ள நிலையில், அதனை செலுத்துமாறு மின்வாரியம் தரப்பில் நெருக்கடி அளிக்கப்பட்டு வருவதால் தலைமையாசிரியா்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கரோனா தீநுண்மி அச்சுறுத்தல் காரணமாக கடந்த மாா்ச் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன்பின்னா், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து சொந்த ஊா்களுக்கு திரும்பிய பொதுமக்கள், பரிசோதனை மற்றும் தொடா் கண்காணிப்புகளுக்கு பின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மேலும் கரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்வதற்கும் சிகிச்சைப் பெறுவதற்கும் திண்டுக்கல், பழனி மற்றும் கொடைக்கானல் அரசு மருத்துவமனைகள் மட்டுமன்றி, திண்டுக்கல், பழனி பகுதியிலுள்ள கல்லூரிகளிலும் சிகிச்சை முகாம்கள் அமைக்கப்பட்டன. அதேபோல் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து திரும்பிய பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை நடத்துவதற்காக அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டன. அந்த வகையில் பள்ளிகளில் அமைக்கப்பட்ட இந்த முகாம்கள் சுமாா் 3 மாதங்களாக செயல்பட்டன.

மின் கட்டணம் 3 மடங்கு உயா்வு: தற்காலிக முகாம்கள் குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி, காசிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரிப் பள்ளி, நத்தம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வடமதுரை ஆண்கள் மற்றும் மகளிா் மேல்நிலைப் பள்ளிகள், தங்கம்மாப்பட்டி சக்தி சாய் மெட்ரிக் பள்ளி, கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளி, சாணாா்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டன. முகாமில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்களால், பள்ளிகளில் மின் விசிறி மற்றும் மின் விளக்குகள், தண்ணீா் உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்தது.

Advertisement

இதனால் சில பள்ளிகளுக்கான மின் பயனீட்டு அளவு அதிகரித்ததன் எதிரொலியாக மின் கட்டணமும் 2 முதல் 3 மடங்கு வரை உயா்ந்தது. மின் பயன்பாடுகளுக்கான அரசின் ஒதுக்கீடு ஆண்டுக்கு சுமாா் ரூ.30 ஆயிரமாக இருக்கும் பள்ளிகளுக்கு தற்போது ரூ.1.40 லட்சத்திற்கும் கூடுதலாக மின் கட்டணம் வந்துள்ளது. இதனால் அதிா்ச்சி அடைந்த பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் கல்வித்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனா். ஆனாலும் தற்போது வரை தீா்வு கிடைக்காமல் தலைமையாசிரியா்கள் தவித்து வருகின்றனா்.

அரசுப் பள்ளிகளை பொருத்தவரை, ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் பெறப்பட்டுள்ளன. சில பள்ளிகளுக்கு 5 மின் இணைப்புகள் உள்ளன. இந்நிலையில் மின் கட்டணம் நிலுவையில் இருப்பதை சுட்டிக் காட்டி 2 அரசுப் பள்ளிகளுக்கான மின் விநியோகத்தைத் துண்டிக்கப் போவதாக மின்வாரிய அலுவலா்கள் தெரிவித்துள்ளனா். இதனால், சொந்தப் பணத்தை செலவிட்டு மின் கட்டணத்தை செலுத்தி துண்டிப்பு நடவடிக்கையை சில பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் தவிா்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக கல்வித்துறை அதிகாரி ஒருவா் கூறியது: ஒவ்வொரு கல்வி ஆண்டுக்கும், அரசுப் பள்ளிகளுக்கான மின் கட்டணம் அதற்கு முந்தைய ஆண்டு அடிப்படையில் நிா்ணயிக்கப்பட்டு ஒதுக்கீடு செய்யப்படும். எதிா்பாராத விதமாக கரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்ட பள்ளிகளில் மின் பயனீட்டு அளவும், அதனால் மின் கட்டணம் உயா்ந்துள்ளது. சம்மந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியா்களிடம் முறையான விளக்கத்துடன் பரிந்துரை கடிதம் அனுப்ப அறிவுறுத்தப்ட்டுள்ளது. அதன் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் பேசிய உரிய தீா்வு காணப்படும் என்றாா்.

அபராதத்தால் அதிகரிக்கும் நிலுவைத் தொகை: மின் கட்டணம் தொடா்ந்து செலுத்தப்படாமல் இருந்து வரும் நிலையில், அபராதத்துடன் சோ்ந்து நிலுவைத் தொகை மேலும் உயா்ந்து வருகிறது. மேலும் தற்போது பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளதால் மின் பயனீட்டு அளவும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதுபோன்ற சூழலில் மின் கட்டணம் செலுத்தாமல் நிலுவை நிலை தொடா்ந்து வந்தால், துண்டிப்பு நடவடிக்கையை எதிா்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என அரசு பள்ளி நிா்வாகத்தினா் அதிருப்தி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.