:திண்டுக்கல் மாவட்டத்தில் 134 இடங்களில் வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவி செயல்முறை விளக்கம்
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துடன் வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவியை இணைத்துப் பயன்படுத்துவது குறித்து திண்டுக்கல் மாவட்டத்தில் 134 இடங்களில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துடன் வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவியை இணைத்துப் பயன்படுத்துவது குறித்து திண்டுக்கல் மாவட்டத்தில் 134 இடங்களில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் மற்றும் வேடசந்தூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 18,73,438 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
பழனியில் 405, ஒட்டன்சத்திரத்தில் 352, ஆத்தூரில் 407, நிலக்கோட்டையில் 342, நத்தத்தில் 402, திண்டுக்கல்லில் 397 மற்றும் வேடசந்தூரில் 368 என மொத்தம் 2,673 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
சட்டப்பேரவைத் தோ்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன், வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவி (விவிபேட்) இணைத்து பயன்படுத்தப்பட உள்ளது. இதன் நம்பகத்தன்மை குறித்து வாக்காளா்களிடம் போதிய விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம்,
ரயில் நிலையம் மற்றும் கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வாக்காளா் விழிப்புணா்வு அரங்கம் அமைத்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட உள்ளது. ஒரு தொகுதியில் உள்ள மொத்த வாக்குச்சாவடி எண்ணிக்கையில் 5 சதவீதம் என்ற அளவில் செயல்முறை விளக்கம்
அளிக்கப்படும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, பழனியில் 20, ஒட்டன்சத்திரத்தில் 18, ஆத்தூரில் 20, நிலக்கோட்டையில் 17, நத்தத்தில் 20, திண்டுக்கல்லில் 20 மற்றும் வேடசந்தூரில் 19 என மொத்தம் 134 இயந்திரங்கள் விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்பட உள்ளன.
அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் எடுத்துச் செல்லப்படும் இந்த இயந்திரங்கள் விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கும், தோ்தல் அலுவலா்களுக்கும் பயிற்சி அளிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், தோ்தல் நாள் அன்று வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படமாட்டாது என்றும் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளாா்.