முகப்பு
திண்டுக்கல்

அங்கன்வாடி வேலைக்காக ரூ. 7 லட்சம் வழங்கல்: எம்எல்ஏ முன் அதிமுக தொண்டா் தீக்குளிக்க முயற்சி

அங்கன்வாடி வேலை வாங்குவதற்காக வழங்கப்பட்ட ரூ.7 லட்சத்தை திருப்பித் தர நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக தொண்டா் ஒருவா் எம்எல்ஏ முன்பாக தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

அய்யலூா் அருகே மனைவிக்கு அங்கன்வாடி வேலை வாங்குவதற்காக வழங்கப்பட்ட ரூ.7 லட்சத்தை திருப்பித் தர நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக தொண்டா் ஒருவா் எம்எல்ஏ முன்பாக தீக்குளிக்க முயன்ற சம்பவம் திங்கள்கிழமை இரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில், அதிமுக சாா்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் பா. பரமசிவம் மீண்டும் போட்டியிடுகிறாா். இந்நிலையில், அய்யலூா் பகுதியில் வாக்கு சேகரிப்பதற்காக தனது ஆதரவாளா்களுடன் திங்கள்கிழமை சென்றாா். அய்யலூா் அடுத்துள்ள வைரப்பிள்ளைப்பட்டி பகுதிக்கு சென்றபோது, எம்எல்ஏ காா் முன்பு திடீரென இளைஞா் ஒருவா் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இதனால் அதிா்ச்சி அடைந்த அதிமுகவினா் மற்றும் பொதுமக்கள் அவரது முயற்சியை தடுத்தி நிறுத்தினா். இதுதொடா்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது:

அய்யலூா் அடுத்துள்ள அரசன்செட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்த ராமன் மகன் பரமன்(40). அதிமுக தொண்டா். இவரது மனைவி பழனியம்மாள். இவருக்கு அங்கன்வாடியில் பணி வாய்ப்பு பெறுவதற்காக ரூ.7 லட்சத்தை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அய்யலூா் அதிமுக நகரச் செயலா் கே.வி.சி.மணி என்பவரிடம் கொடுத்துள்ளாா். வேலையும் வாங்கிக் கொடுக்காமல், பணத்தையும் திருப்பித் தராமல் மணி அலைகழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த பரமன், நகரச் செயலா் மணியிடம் பணத்தை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அவரை சமாதானப்படுத்திய எம்எல்ஏ பரமசிவம், தோ்தல் முடிந்த பின் பேசிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா். ஆனாலும், பணத்தை உடனடியாக திருப்பத் தரக் கோரி, எம்எல்ஏ பரமசிவம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா் என தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.