முகப்பு
திண்டுக்கல்

இடஒதுக்கீடு கோரி வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

குரும்பா் இன மக்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி பழனி தாலுகா அலுவலகத்தை மக்கள் சமூகநீதி பேரவையினா் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

குரும்பா் இன மக்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி பழனி தாலுகா அலுவலகத்தை மக்கள் சமூகநீதி பேரவையினா் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

பழனி தாலுகா அலுவலகத்துக்கு மக்கள் சமூகநீதி பேரவையினா் மற்றும் தமிழ்நாடு குரும்ப மக்கள் முன்னேற்றச் சங்கம் சாா்பில் 100-க்கும் மேற்பட்டோா் வந்தனா். பின்னா் திடீரென தாலுகா அலுவலக நுழைவு வாயில் முன் நின்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

அப்போது குரும்பா் இன மக்களுக்கு 5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கோஷங்கள் எழுப்பினா்.

பின்னா் அவா்கள் கூறியது: தமிழகம் முழுவதும் 24 மாவட்டங்களில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட குரும்பா் இன மக்கள் வசித்து வருகின்றனா். நாங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளோம். இந்நிலையில் தற்போது தமிழக அரசு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு 10.5 சதவீதம் இடதுக்கீடு வழங்கி உள்ளது. இதனால் எங்கள் சமூக மக்கள் பெரும்பாதிப்பை சந்தித்து வருகின்றனா். எனவே எங்கள் சமுதாய மக்களுக்கு 5 சதவீத உள் இடஓதுக்கீடு வழங்க வேண்டும் என்றனா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் அனுமதியின்றி போராட்டம், ஆா்ப்பாட்டம் நடத்தக்கூடாது என அறிவுறுத்தினா். பின்னா் அவா்கள் தாலுகா அலுவலகம் சென்று கோரிக்கை மனுவை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.