முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல் நூலகம் சார்பில் கலைப் போட்டிகள்: 200 மாணவர்கள் பங்கேற்பு

முப்பெரும் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கலைப் போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:35 AM
திண்டுக்கல் நூலகம் சார்பில் கலைப் போட்டிகள்
பகிர்:

நாட்டின் 75ஆவது சுதந்திர தின நிறைவு தேன் விழா, மகாகவி பாரதியார்  நினைவு நூற்றாண்டு விழா மற்றும் 54ஆவது தேசிய நூலக வார விழா என முப்பெரும் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கலைப் போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, ஓவியம் மற்றும் பேச்சுப் பாேட்டி ஆகிய கலைப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்கு என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும், இந்திய விடுதலைப் போரில் எங்களை கவர்ந்த நிகழ்வுகள் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும் நடத்தப்பட்டன.

திண்டுக்கல் மாவட்ட மைய நூலக வளாகத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட நூலக அலுவலர் இரா.சரவணக்குமார் தலைமையில் போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொருப் போட்டியிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்கலுக்கு பரிசு மற்றும் சான்றிதழும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழும் வழங்கப்படும் என நூலக அலுவலர்கள் தெரிவித்தனர்.

போட்டிக்கான ஏற்பாடுகளை முதல்நிலை நூலகர் ஆ.சக்திவேல், அலுவலக கணக்கர் செ.ஜெயராமன், மூன்றாம் நூலகர் செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.

இடப் பற்றாக்குறையால் நெருக்கடி:

போட்டிகள் நடைபெற்ற மாவட்ட மைய நூலகத்தின் தரைத் தளத்தில், பல்வேறு நூலகங்களுக்கு அனுப்பப்பட வேண்டி புத்தக பண்டல்கள் அடுக்க வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், 1, 2 மற்றும் 3ஆவது தளங்களிலும் இடப் பற்றாக்குறை உள்ளது. இதனால், போட்டித் தேர்வுக்கு தயார் செய்யும் இளைஞர்களை வெளியேற்றிவிட்டு, அந்த இடம் உள்பட 4 தளங்களிலும் 3 தொகுதிகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.

ஆனாலும், போட்டியில் பங்கேற்க வந்த மாணவர்கள் போதிய இட வசதி இல்லாமல் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக பள்ளி மாணவர்கள் கூறுகையில்,

மாவட்ட மைய நூலகத்தில் இட நெருக்கடி இருப்பதை கருத்தில் கொண்டு, இதுபோன்ற போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு உரிய இட வசதியை ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.