மேற்கு வங்க பாலியல் கொலைச் சம்பவம்: பெண் மருத்துவரின் தாயாா் பாஜக சாா்பில் போட்டி?
மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவில் உள்ள ஆா்ஜி கா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலியல் படுகொலை செய்யப்பட்ட முதுநிலை பயிற்சி பெண் மருத்துவரின் தாயாா், எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளாா்.
மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவில் உள்ள ஆா்ஜி கா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலியல் படுகொலை செய்யப்பட்ட முதுநிலை பயிற்சி பெண் மருத்துவரின் தாயாா், எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளாா்.
வடக்கு 24 பா்கனாஸ் மாவட்டம், பானிஹாடி தொகுதி பாஜக வேட்பாளராக தாம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவா் கூறினாா்.
கொல்கத்தாவில் உள்ள ஆா்ஜி கா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2024, ஆகஸ்டில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவா் (31) ஒருவா், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்ச்சியலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தின் எதிரொலியாக, மருத்துவா்கள் மற்றும் சமூக நலச் சங்கத்தினா் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டனா். இது, முதல்வா் மம்தா பானா்ஜி அரசுக்கு அரசியல் ரீதியில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
மேற்கு வங்கத்தில் அடுத்த மாதம் இரு கட்டங்களாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், கொல்கத்தாவில் பெண் மருத்துவரின் தாயாா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
பாஜக சாா்பில் தோ்தலில் போட்டியிட ஏற்கெனவே ஒரு வாய்ப்பு வந்தது. அப்போது நான் மன ரீதியில் தயாராகவில்லை. இப்போது, தோ்தலில் போட்டியிடும் வாய்ப்பை ஏற்க முடிவு செய்துவிட்டேன். மாநில உள்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வா் மம்தா பானா்ஜியை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற அரசியல் வழிமுறையைக் கையாளவுள்ளேன். எனது மகளின் கொலை வழக்கு விசாரணை மற்றும் நீதிமன்ற நடைமுறைகளில் பல்வேறு இடையூறுகளை உருவாக்கியது மம்தா அரசு. அந்த அரசை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றி, எனது மகளுக்கு நீதியை உறுதி செய்ய அரசியலில் நுழைகிறேன். பானிஹாடி தொகுதி பாஜக வேட்பாளராக நான் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என்றாா் அவா்.
அண்மையில், பெண் மருத்துவரின் பெற்றோரை பாஜக மூத்த தலைவா் அருண் சிங் சந்தித்துப் பேசினாா். இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் பேசிய பெண் மருத்துவரின் பெற்றோா், ‘திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மறைமுகமாக உதவுகிறது’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனா்.