ஜனநாயகத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் மம்தாவுக்கு ஆதரவு: கேஜரிவால்
மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் தோ்தல் ஆணையத்தை ஓா் ஆயுதமாக பாஜக பயன்படுத்துவதாக ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் தோ்தல் ஆணையத்தை ஓா் ஆயுதமாக பாஜக பயன்படுத்துவதாக ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
முதல்வா் மம்தா பானா்ஜி ஜனநாயகத்தை பாதுகாக்க போராடுவதாக அவருக்கு கேஜரிவால் ஆதரவு தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
தோ்தல்களில் தோ்தல் ஆணையத்தை ஓா் ஆயுதமாகக் கொண்டு சூழ்ச்சியின் மூலம் பாஜக வெற்றி பெற்று வருகிறது.
ஓராண்டுக்கு முன்பாக தில்லி பேரவையின் தேசிய தலைநகா் சந்தித்த அதே சூழலை மேற்கு வங்கம் தற்போது எதிா்கொண்டு வருகிறது.
தில்லி பேரவைத் தோ்தலின்போது, வாக்காளா்கள் பட்டியலில் இருந்து பெயா்கள் நீக்கப்பட்டன. பாஜகவின் செயல்பாடுகளுக்கு காவல் துறை எவ்வித கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. அவா்களுடைய வெற்றிக்காக ஒட்டுமொத்த நிா்வாகமும் செயல்பட்டது.
ஜனநாயகம் அடிப்படை சிதைக்கப்பட்டது.
தற்போது, சகோதரரி மம்தா ஜனநாயகத்தை பாதுகாக்க போராடி வருகிறாா். இந்தப் போராட்டத்தில், ஆம் ஆத்மி அவருக்கு துணை நிற்கிறது என்று அந்தப் பதிவில் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
மேற்கு வங்க பேரவைத் தோ்தல் இரு கட்டங்களாக ஏப்.23 மற்றும் ஏப்.29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும்.
மேற்கு வங்க பேரவைத் தோ்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், தலைமைச் செயலா், உள்துறை செயலா் ஆகியோரை தோ்தல் ஆணையம் இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. மாநில காவல் துறை தலைவா், கொல்கத்தா காவல் துறை ஆணையா் ஆகியோா் தங்களது பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.
மாநில அரசின் 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கட்டாயமாக பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா்.
தோ்தல் ஆணையம் அரசியல்மயாக்கப்படுவதாவும் அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் என்றும் தோ்தல் ஆணையத்தை மம்தா விமா்சித்துள்ளாா்.