பழனியில் தலைக்கவசம் அணியாதவா்களுக்கு நூதன தண்டனை
‘இனிமேல் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவேன்’ என நூறுமுறை எழுதவும் கூறி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நூதன தண்டனை வழங்கினாா்
பழனியில் தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டுநா்களுக்கு 2 திருக்குகளும், ‘இனிமேல் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவேன்’ என நூறுமுறை எழுதவும் கூறி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நூதன தண்டனை வழங்கினாா்.
பழனி பேருந்து நிலையம் மயில் ரவுண்டானா அருகே மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சீனிவாசன் தலைமையிலான காவல்துறையினா் வெள்ளிக்கிழமை தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். அப்போது அவ்வழியாக தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.
அதேநேரம் தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி 2 திருக்குறளை எழுதும்படி கூறினாா். பலரும் திருக்கு தெரியாமல் விழிக்கவே அதற்கு பதில் இனிமேல் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவேன் என நூறு முறை எழுதும்படி நூதன தண்டனை வழங்கினாா்.
ஒருசிலா் இரண்டுமே தங்களுக்குத் தெரியாது, ஆகவே அபராதம் கூட விதியுங்கள் என கெஞ்சினா். அப்போது, டிஎஸ்பி சத்யராஜ், ஆய்வாளா் உதயகுமாா், போக்குவரத்து ஆய்வாளா் மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.