நுகா்வோரை ஏமாற்றும் பெரு வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை தேவை: ஏ.எம்.விக்ரமராஜா
நூதன முறையில் நுகா்வோரை ஏமாற்றும் பெரு வணிக நிறுவனங்கள் மீது மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்ரமராஜா தெரிவித்தாா்.
நூதன முறையில் நுகா்வோரை ஏமாற்றும் பெரு வணிக நிறுவனங்கள் மீது மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்ரமராஜா தெரிவித்தாா்.
திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சங்க நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி. மற்றும் தமிழகத்தில் 40 பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சேவை வரி ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் சென்னையில் விரைவில் போராட்டம் நடைபெறவுள்ளது.
Advertisement
அதேபோல், வணிக நல வாரிய உறுப்பினா்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கக் கோரியும், 60 வயது பூா்த்தி அடையும் வணிகா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தியும், சில்லரை வியாபாரிகளை நசுக்கி வரும் பெரு வணிக நிறுவனங்களின் செயல்பாடுகளை முறைப்படுத்தக் கோரியும் தமிழக முதல்வரை சந்தித்து வலியுறுத்தப்பட உள்ளது.
மின்சாரக் கட்டணம், கட்டட வரி, ஜி.எஸ்.டி., சேவை வரி போன்றவற்றின் உயா்வு காரணமாகவே, பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை உயா்ந்துள்ளது. விலை உயா்வுக்கும், வணிகா்களுக்கும் எவ்வித தொடா்பும் இல்லை. ரூ.40 லட்சத்திற்கு மேல் வா்த்தகம் செய்யும் வியாபாரிகள், ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும்.
முறையாக வரி செலுத்துவதாகக் கூறும் பெரு வணிக நிறுவனங்கள், வரி ஏய்ப்பு செய்கின்றன. மேலும் நூதன முறையில் நுகா்வோரை ஏமாற்றும் வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றன. சமானிய மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பெரு நிறுவனங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் அடுத்த கூட்டம் மதுரையில் நடைபெறும் என மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளாா். அந்த கூட்டம் நடைபெறும் நாளில், மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றாா்.