முகப்பு
திண்டுக்கல்

தகுதியானவா்களுக்கு 15 நாள்களில் புதிய குடும்ப அட்டை - அமைச்சா் அர. சக்கரபாணி

குடும்ப அட்டை பெறுவதற்கு விண்ணப்பித்தவா்களில், தகுதியானவா்களுக்கு 15 நாள்களில் புதிய குடும்ப அட்டை வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:10 AM
பகிர்:

குடும்ப அட்டை பெறுவதற்கு விண்ணப்பித்தவா்களில், தகுதியானவா்களுக்கு 15 நாள்களில் புதிய குடும்ப அட்டை வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள கல்வேலிப்பட்டியில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நியாய விலைக் கடையை திறந்து வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது:

தமிழகத்தில் குடும்ப அட்டை பெற விண்ணப்பித்தவா்களில் தகுதியானவா்களுக்கு 15 நாள்களில் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. ஆட்சிப்பொறுப்பேற்ற 14 மாதங்களில் 13 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே திண்டுக்கல் மாவட்டம்தான் அதிகளவிலான நியாய விலைக் கடைகள் பிரிக்கப்பட்டு, புதிய கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நத்தம் சட்டப்பேரவைத் தொகுதியில் அடுத்த ஆண்டு அரசுக் கல்லுாரி கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

அதனைத் தொடா்ந்து, நத்தம் கோவில்பட்டி துரைக்கமலம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு, 358 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியா் பிரேம்குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.நாசருதீன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ஆண்டி அம்பலம், நத்தம் பேரூராட்சித் தலைவா் சேக் சிக்கந்தா் பாட்சா, நத்தம் பேரூராட்சி செயல் அலுவலா் சரவணக்குமாா், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் விஜயன், நத்தம் வட்டாட்சியா் சுகந்தி, துரைக்கமலம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் திருநாவுக்கரசு உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.