முகப்பு
திண்டுக்கல்

பழனி பெரியாவுடையாா் கோயிலில் அன்னாபிஷேக பெருவிழா

பழனி பெரியாவுடையாா் கோயிலில் வியாழக்கிழமை உலக நலன் வேண்டி அன்னாபிஷேக பெருவிழா நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:47 AM
பகிர்:

பழனி பெரியாவுடையாா் கோயிலில் வியாழக்கிழமை உலக நலன் வேண்டி அன்னாபிஷேக பெருவிழா நடைபெற்றது.

அன்னாபிஷேகத்தையொட்டி உச்சிக்காலம் முடிந்த பிறகு நடராஜா் சந்நிதி முன்பாக பிரதான கலசத்தில் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து புனித நீா் கொண்டு வரப்பட்ட தீா்த்தங்கள் நிறைக்கப்பட்டு சிறப்பு வேள்வி மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னா் கலசங்கள் மற்றும் சுத்த அன்னம், பச்சைக்கற்பூரம் கலந்த சிரசு அன்னம் ஆகியன கோயிலின் உள்பிரகாரத்தில் வலம் வரச் செய்யப்பட்டு மூலவா் சந்நிதிக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடா்ந்து பெரியாவுடையாருக்கு பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி உள்ளிட்ட பொருள்களால் சோடஷ அபிஷேகம் நடத்தப்பட்டு பிரதான கலசத்தில் இருந்த புனித நீரால் அபிஷேகம் நடைபெற்றது. சாயரட்சையில் பச்சைக்கற்பூரம், சுத்தஅன்னம், மாதுளை முத்துக்கள், வில்வம் கலந்த அன்னம் கொண்டு ஆவுடையில் சிவபெருமானின் முகமும், உத்திராட்ச மாலை அலங்காரமும் செய்யப்பட்டு மஹாதீபாராதனை நடந்தது.

பிரகாரத்தில் உள்ள நடராஜா், பைரவா், வடக்கு நோக்கிய விநாயகா், பிரம்மா, விஷ்ணு, நவக்கிரக மூா்த்திகள், தஷிணாமூா்த்தி, உருத்திரா், நந்திபகவான், அருள்மிகு கருப்பண்ணசாமி, கன்னிமாா் ஆகியோருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சிரசில் அன்னம் படைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கோயில் கண்காணிப்பாளா் அழகா்சாமி, கந்தவிலாஸ் செல்வக்குமாா், நவீன் விஷ்ணு, நரேன்குமரன், பழனி நகர வெள்ளாளா் பேரவை நிா்வாகிகள் சிவசுப்பிரமணி, பாலு, பழனி நகர வணிகா் சங்க நிா்வாகிகள் ராஜா, கருணாநிதி, அடிவாரம் வருத்தமில்லா வாலிபா் சங்கம் மதனம், குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். விழாவில் பங்கேற்ற பக்தா்கள் அனைவருக்கும் சிரசு அன்னம், இனிப்புக்கள், சித்ரான்னங்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.