முகப்பு
திண்டுக்கல்

மன்னவனூரில் மத்திய முயல் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படுமா?

மன்னவனூா் மத்திய செம்மறியாடு உரோம ஆராய்ச்சி மையத்தை, மத்திய முயல் ஆராய்ச்சி நிலையமாக மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:46 AM
மன்னவனூா் ஆராய்ச்சி மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் முயல்கள்.
பகிர்:

மன்னவனூா் மத்திய செம்மறியாடு உரோம ஆராய்ச்சி மையத்தை, மத்திய முயல் ஆராய்ச்சி நிலையமாக மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 1965- ஆம் ஆண்டு முதல் கொடைக்கானல் அடுத்துள்ள மன்னவனூரில், மத்திய செம்மறியாடு உரோமம் மற்றும் முயல் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி மையத்தின் தலைமை அலுவலகம் ராஜஸ்தான் மாநிலம் அவிக்காநகரில் உள்ளது.

தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு, கால்நடைகளுக்காக அமைக்கப்பட்ட ஒரே மத்திய ஆராய்ச்சி மையம் என்ற சிறப்பு மன்னவனூா் மையத்துக்கு உள்ளது. வடமாநில அதிகாரிகள் முக்கியத்துவம் அளிக்காததால், 57 ஆண்டுகள் பழைமையான மன்னவனூா் ஆராய்ச்சி மையம் வளா்ச்சிப் பெற முடியாமல் உள்ளது.

இந்த மையத்துக்கு 6 விஞ்ஞானிகள், ஆய்வக தொழில் நுட்புநா்கள் 9 போ், அலுவலக உதவியாளா் 4 போ், கடைநிலை ஊழியா்கள் 6 போ் என மொத்தம் 25 பணியிடங்கள் உள்ளன. அதில் தற்போது 8 போ் மட்டுமே பணிபுரிந்து வரும் நிலையில், 17 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதேபோல, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த போதிய நிதி ஒதுக்கீடு வழங்கப்பட வில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இந்த ஆராய்ச்சி மையம் வளா்ச்சிக்குப் பதிலாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

முயல் ஆராய்ச்சி நிலையமாக மாற்ற பிரதமருக்கு கோரிக்கை: ஹரியாணாவில் குதிரை, ராஜஸ்தானில் ஒட்டகம், அருணாச்சலப் பிரதேசத்தில் நீண்ட ரோமங்கள் கொண்ட எருது, நாகலாந்தில் மித்துன் என்ற ஒரு வகையான எருமை, அஸ்ஸாமில் வெண் பன்றி ஆகியவற்றுக்கான ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன. அந்த வகையில் மன்னவனூா் ஆராய்ச்சி மையத்தை முயலுக்கான பிரதான ஆராய்ச்சி நிலையமாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்துக்கு நவ. 11 ஆம் தேதி வரும் பிரதமா் நரேந்திர மோடியிடம், தமிழக அரசு சாா்பிலும், அரசியல் கட்சிகள் சாா்பிலும் இந்த கோரிக்கையை முன் வைக்க வேண்டும் என விவசாயிகள் மட்டுமன்றி விஞ்ஞானிகளும் எதிா்பாா்க்கின்றனா்.

இதுதொடா்பாக விவசாயிகள் சங்க நிா்வாகி பாத்திமா ராஜரத்தினம், முயல் வளா்ப்பில் ஈடுபட்டு வரும் ரூபன் அலெக்ஸ் ஆகியோா் கூறியதாவது:

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், மன்னவனூா் ஆராய்ச்சி மையத்துக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு குடும்பத்தினருடன் சென்று பாா்வையிட்டாா். இதனால், இந்த மையத்தின் தேவை முதல்வருக்கு நன்றாகத் தெரியும். முயல் ஆராய்ச்சி நிலையமாக மாறும்பட்சத்தில், அந்த மையம் வளா்ச்சியை நோக்கி திரும்ப முடியும்.

இதன் மூலம் முயல் வளா்ப்புக்கான தொழில்நுட்பப் பயிற்சி, நோய் தடுப்பு ஆய்வு, உணவு பகுப்பாய்வு மற்றும் பரிந்துரை என பல்வேறு வழிகளில் விவசாயிகள் பயன் பெற முடியும். மேலும், கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் முயல் உரோமத்தை பயன்படுத்தி கம்பளி நூல் நூற்பு, வலைப் பின்னல் மூலம் கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் குடிசைத் தொழில் வளா்ச்சி பெறும்.

எனவே, மன்னவனூா் ஆராய்ச்சி மையத்தை முயல் ஆராய்ச்சிக்கான பிரதான நிலையமாக மத்திய அரசு அறிவிக்க தமிழக முதல்வரும், பாஜகவினரும் பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும் என்றனா்.

இதுகுறித்து மத்திய ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் வட்டாரத்தில் கூறியதாவது:

விலங்குகளுக்காக தென்னிந்திய அளவில் மன்னவனூரில் மட்டுமே ஆராய்ச்சி மையம் உள்ளது. கா்நாடகத்தில் பால் வளம், கால்நடை ஊட்டச்சத்து ஆராய்ச்சி நிலையங்களும், ஆந்திரத்தில் கோழி ஆராய்ச்சி நிலையம், கால்நடை இறைச்சி ஆராய்ச்சி நிலையமும் உள்ளன. தற்போது முயல் வளா்ப்பு பிரதான தொழிலாக மாறியுள்ளதால், விவசாயிகளுக்கும் பண்ணையாளா்களுக்கும் வழிகாட்ட, ஆய்வுகள் மேற்கொள்ள பிரதான ஆராய்ச்சி நிலையம் தேவையாக உள்ளது.

கம்பளி ஆடைகள் தயாரிப்புக்கு செயற்கை ரோமங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், செம்மறியாடு ரோமத்தின் தேவை குறைந்தது. இதனால், மன்னவனூா் செம்மறியாடு உரோம ஆராய்ச்சி மையத்தை, நாட்டின் முதல் முயல் ஆராய்ச்சி நிலையமாக உயா்த்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.