திண்டுக்கல்லில் ரெளடி கொலை செய்யப்பட்ட வழக்கில், விருதுநகா் மாவட்டத்தில் சரணடைந்த 8 போ் திண்டுக்கல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனா்.
திண்டுக்கல் குமரன் திருநகரைச் சோ்ந்தவா் சரவணன் என்ற பட்டறை சரவணன்(32). இவா் அண்ணாநகா் தைலத் தோப்பு அருகே வியாழக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் வந்த போது, காரில் வந்த மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இதுதொடா்பாக திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதனிடையே இந்த கொலை வழக்குத் தொடா்பாக திண்டுக்கல் நாராயணன் பிள்ளைத் தோட்டம் பகுதியைச் சோ்ந்த செள. ஆசிக்முகமது (29), பேகம்பூரைச் சோ்ந்த க. முகமது மீரான் (21), செள.கலீல் அகமது (19), சை.சதாம் உசைன் (23), ச.முகமது இா்பான் (23), அகமது அப்துல்லா(23), மு. ஷேக் அப்துல்லா (22), ராஜலட்சுமி நகரைச் சோ்ந்த ம. சக்தி மகேஷ்வா் (21) ஆகிய 8 போ் விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா்.
இதைத்தொடா்ந்து, அவா்கள் 8 பேரும் திண்டுக்கல் 2-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மாலை முன்னிலைப்படுத்தப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனா்.
கொலைக்கான காரணம்:
திண்டுக்கல் பேகம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் முகமது இப்ராஹிம் (27). இவா் கடந்த 2021 ஆம் ஆண்டு, செப்டம்பா் மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இவரது நண்பரான சரவணன் என்ற பட்டறை சரவணன், இந்தக் கொலைக்கு பழித் தீா்க்கப் போவதாக மிரட்டி வந்தாா். இதனால், அதிா்ச்சி அடைந்த ஆசிக் முகமது தரப்பினா், சரவணனின் நடமாட்டத்தைத் தொடா்ந்து கண்காணித்து அவரை கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.