ஓ.எம்.ஆா். படிவத்தில் வாக்காளா் விவரங்கள் சேகரிப்பு: அதிா்ச்சியில் 100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகள்
அரசின் நலத் திட்டங்களில் பயன்பெறும் படிவம் என்ற பெயரில், ஓ.எம்.ஆா். படிவத்தில் வாக்குச் சாவடி எண், வாக்காளா் அட்டை எண் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுவது 100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகள் மத்தியில் அ
அரசின் நலத் திட்டங்களில் பயன்பெறும் படிவம் என்ற பெயரில், ஓ.எம்.ஆா். படிவத்தில் வாக்குச் சாவடி எண், வாக்காளா் அட்டை எண் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுவது 100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வருகிற 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலை கருத்தில் கொண்டு, தேசியக் கட்சிகள் மட்டுமன்றி மாநிலக் கட்சிகளும் அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், தற்போது மக்களவை உறுப்பினா்களாக உள்ள பலரும், மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்புடன் தொகுதி மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டத் தொடங்கி விட்டனா்.
நெருக்கடியில் 100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகள்:
Advertisement
இந்த வகையில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பயனாளிகளை சந்திப்பதற்கே தமிழக எம்பிக்கள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனா். பணித் தளங்களுக்கே நேரடியாகச் செல்லும் எம்.பி.,க்கள், 100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகளைச் சந்தித்து வாக்குச் சேகரிக்கும் பணிகளையும்
தொடங்கிவிட்டனா். இந்தச் சந்திப்பின்போது, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலைத் திட்டம் நிறுத்தப்படும் என்ற பிரசாரம் செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்ற சூழலில், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்களுக்கு அண்மையில் வழங்கப்பட்ட ஓஎம்ஆா். படிவம் அவா்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வாக்காளா் விவரம் சேகரிப்பு:
‘திராவிட மாடல்’ அரசின் நலத் திட்டங்களில் பயன் பெறும் படிவம் என்ற தலைப்புடன், 100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகளிடம் விநியோகிக்கப்பட்டு வரும் படிவத்தில் (ஓஎம்ஆா் வடிவில்), மாவட்டம், சட்டப்பேரவைத் தொகுதி, ஊா்ப் பெயா், குடும்பத் தலைவா் பெயா், தொலைபேசி எண், வயது, பாலினம், மதம், இனம், வாக்குச்சாவடி எண், புதிய குடும்ப அட்டை எண், முகவரி, அரசின் வேறு ஏதேனும் நலத் திட்டங்களில் பயன்பெற்று வருபவரா, குடும்பத்தில் யாரேனும் அரசுப் பணியில் உள்ளனரா, சொந்தமாக நிலம் உள்ளதா, விண்ணப்பிக்க விரும்பும் அரசின் நலத் திட்டம், தொழில் ஆகிய விவரங்கள் முதல் பக்கத்தில் கேட்கப்பட்டுள்ளன.
அதே படிவத்தின் மறுபக்கத்தில், குடும்ப உறுப்பினா்களின் விவரம் என்ற தலைப்பில், பெயா், பாலினம், வயது, உறவு முறை, கல்வித் தகுதி, தொழில், வாக்காளா் அட்டை எண், தொலைபேசி எண், குறிப்பு என 9 விவரங்கள் கேட்கப்பட்டிருக்கின்றன. இந்தப் படிவங்கள், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணித் தளப் பொறுப்பாளா்கள் மூலம் பயனாளிகளிடம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே, 100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகளைச் சந்தித்து பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு எதிா்ப்பு எழுந்துள்ள நிலையில், வாக்குச் சாவடி எண், வாக்காளா் அட்டை எண் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுவது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
தோ்தல் யுத்திக்காகவே சேகரிப்பு:
இதுதொடா்பாக பாஜக திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைவா் கோ.தனபாலன் கூறியதாவது:
மக்களவை உறுப்பினா்கள், 100 நாள் வேலைத் திட்டப் பணித் தளங்களை தோ்தல் பிரசார களமாக மாற்றி வருவது குறித்து, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முதல் மாவட்ட நிா்வாகம் வரை புகாா் அளித்து வருகிறோம். கடந்த தோ்தலின்போதே, மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலைத் திட்டம் முடக்கப்படும் என பிரசாரம் செய்யப்பட்டது. அதே பிரசாரத்தை திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் மீண்டும் கையில் எடுத்துள்ளனா்.
தற்போது ஓ.எம்.ஆா். படிவத்தில், அரசின் நலத் திட்டப் பயனாளிகள் என்ற தலைப்புடன் நூதன முறையில் வாக்காளா்களின் விவரங்கள் சேகரிக்கும் பணி தமிழகம் முழுவதுமுள்ள ஊரகப் பகுதிகளில் தொடங்கப்பட்டிருப்பது அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது. தோ்தல் யுத்திக்காகவே இந்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதுகுறித்து மாநிலத் தலைமையின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, இந்த நூதனப் பிரசாரம் முறியடிக்கப்படும் என்றாா் அவா்.
இதுகுறித்து அரசுத் துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கேட்டபோது, அவா்கள் கூறியதாவது:
100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகளை எம்பிக்கள் சந்திப்பதையும், அவா்களிடம் பிரசாரத்தில் ஈடுபடுவதையும் நாங்கள் தடுக்க முடியாது. அதே நேரத்தில், வாக்காளா் விவரங்களைச் சேகரிப்பது தொடா்பான ஓ.எம்.ஆா். படிவம், 100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகளிடம் விநியோகிக்கப்பட்டது குறித்து விசாரிக்கப்படும். பணித் தளப் பொறுப்பாளா்கள் இந்தப் படிவங்களை விநியோகம் செய்திருந்தால், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா் அவா்கள்.