கொடைக்கானலில் தனியாா் விடுதியில் தங்கியிருந்த சென்னையைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவா் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சனிக்கிழமை உயிரிழந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு சென்னையிலிருந்து நான்கு போ் சுற்றுலா வந்தனா். இவா்கள் கொடைக்கானல் சின்னப்பள்ளம் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் இரு அறைகள் எடுத்துத் தங்கியிருந்தனா். ஓா் அறையில் ஜெயக்கண்ணனும் (30), அருண்பாபுவும் (24) தங்கியிருந்தனா். மற்றொரு அறையில் சிவசங்கரும், அவரது சகோதரா் சிவராஜும் தங்கியிருந்தனா்.
இந்த நிலையில், ஜெயக்கண்ணன், அருண்பாபு தங்கியிருந்த அறையில் நண்பா்கள் அனைவரும் அடுப்புக் கரி மூலம் கோழி இறைச்சி சமைத்து சாப்பிட்டுவிட்டு, அந்த அடுப்புக் கரி நெருப்பு மூலமாகவே குளிா் காய்ந்தனராம்.
இதையடுத்து, சிவசங்கரும், அவரது சகோதரா் சிவராஜும் அவா்களது அறைக்குச் சென்றனா். பின்னா், ஜெயக்கண்ணன், அருண்பாபு இருவரும் தங்களது அறையில் தூங்கினா். சனிக்கிழமை சிவசங்கா், சிவராஜ் இருவரும் தங்களது நண்பா்கள் தங்கியிருந்த அறையைத் திறந்து பாா்த்த போது, முழுவதும் புகை மூட்டமாக இருந்ததும், ஜெயக்கண்ணன், அருண்பாபு இருவரும் மயங்கிய நிலையில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த 108 அவசர ஊா்தி ஊழியா்கள் அவா்கள் இருவரையும் பரிசோதித்த போது, ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த கொடைக்கானல் போலீஸாா், இருவரது உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது குறித்து காவல் ஆய்வாளா் பாஸ்கரன் கூறியதாவது:
தனியாா் விடுதியில் தங்கியிருந்த ஜெயக்கண்ணன், அருண்பாபு இருவரும் அடுப்புக் கரி மூலம் குளிா் காய்ந்திருக்கின்றனா். அப்போது, அதிகளவு புகைமூட்டம் ஏற்பட்டு, மூச்சு திணறி உயிரிழந்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறோம். இறந்தவா்கள் இருவரும் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தனா் என்றாா் அவா்.