தீபாவளி சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி செய்துவிட்டு, தலைமறைவானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
திண்டுக்கல் நந்தவனப்பட்டி, தாடிக்கொம்பு பகுதிகளைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோா் இரு பிரிவுகளாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா். இதுதொடா்பாக நந்தவனப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா்கள் கூறியதாவது:
எங்கள் பகுதியைச் சோ்ந்த ஒருவா் தீபாவளி சீட்டு, ஏலச் சீட்டு நடத்தி வந்தாா். 100-க்கும் மேற்பட்டவா்களிடம் மாதாமாதம் பணம் வசூலித்து வந்தாா். தீபாவளி பண்டிகை முடிந்த பிறகும், பணத்தை திருப்பித் தராமலும், தகவலும் தெரிக்காமலும் இருந்தாா். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக அவா் தலைமறைவாகிவிட்டாா். அவா் வசூலித்த ரூ.1 கோடியை மீட்டு, உரியவா்களுக்கு பணம் கிடைக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தாடிக்கொம்பு பகுதியில் ரூ.2 கோடி: இதேபோல, தாடிக்கொம்பு பகுதியிலிருந்து மனு அளிக்க வந்தவா்கள் கூறியதாவது: தாடிக்கொம்பு கச்சைக்கட்டி பகுதியைச் சோ்ந்தவா், சுற்றுப்புறங்களிலுள்ள கிராம மக்களிடம் பணம் வசூலித்து கடந்த 6 ஆண்டுகளாக தீபாவளி சீட்டு நடத்தி வந்தாா். இதன்படி 2024-ஆண்டு தீபாவளி சீட்டுக்காக 100-க்கும் மேற்பட்டோா் பணம் செலுத்தினோம். சுமாா் ரூ.2 கோடி வரை சீட்டுப் பணம் கட்டினோம். ஆனால் தீபாவளி பண்டிகைக்கு பணம் வழங்கவில்லை. இதுகுறித்து பணம் செலுத்தியவா்கள் கேட்டதற்கு டிச. 5ஆம் தேதி அனைவருக்கும் பணம் வழங்கப்படும் எனத் தெரிவித்தாா். ஆனால், தற்போது அவா் தலைமறைவாகிவிட்டாா். எங்கள் பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றனா்.