பழனியருகே சக்கரம் கழன்று ஓடிய அரசுப் பேருந்து
பழனி: பழனியருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்று ஓடிய நிலையில் ஓட்டுநரின் சமயோசிதத்தால் விபத்து தவிா்க்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியிலிருந்து அமரபூண்டி வழியாக திங்கள்கிழமை தீா்த்தாக்கவுண்டன் வலசுக்குச் சென்ற நகர அரசுப் பேருந்தின் இடதுபுற முன் சக்கரம் தனியாக கழன்று ஓடியது. இந்தச் சக்கரம் சாலையோரத்தில் இருந்த சாக்கடை கால்வாயில் விழுந்தது. இதையடுத்து பேருந்தை இயக்கிய ஓட்டுநா் நீதிப்பாண்டி உடனடியாக பேருந்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சாலையோரமாக நிறுத்தினா். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
இதுகுறித்து அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் கூறியதாவது: சரியான பராமரிப்பு இல்லாத வாகனங்களையே நகரப் பேருந்துகளாக இயக்க அரசுப் பணிமனைகளில் வழங்குகின்றனா் என்றனா்.
போக்குவரத்து நிா்வாகம் நகரப் பேருந்துகளை முறையாக பராமரித்து, உதிரிபாகங்களை மாற்றி பாதுகாப்பான பயணத்துக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.