ஒட்டன்சத்திரத்தில் போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி மையத்தில் வகுப்புகள் தொடக்கம்
பட விளக்கம்- ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிப்பட்டியில் போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி மையத்தில், தோ்வா்களுக்கு பயிற்சி அளித்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலா் பிரபாவதி. ஒட்டன்சத்திரம், மாா்ச் 22: ஒட்டன்சத்திரத்தில் போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி மையத்தில் வெள்ளிக்கிழமை வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள காளாஞ்சிப்பட்டியில் தமிழக அரசு சாா்பில் ரூ.10.81 கோடி செலவில் கலைஞா் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தோ்வு இலவச பயிற்சி மையம் கட்டப்பட்டது. இதை கடந்த பிப். 27- ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா். இந்தப் பயிற்சி மையத்தில் 800 போ் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கருத்தரங்கக்கூடம், பொதுநூலகம், கணினி வழிப்பயிற்சிக் கூடம், இணையவழி நூலகம், பயிற்றுநா் அரங்கம், அலுவலகம், உணவு உள்கொள்ளும் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, வாகனங்கள் நிறுத்தும் இடம், கழிப்பறை வசதிகள் ஆகியவை உள்ளன. விரைவில் இங்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் என தனித்தனி விடுதிகள் கட்டப்படவுள்ளன. இந்த நிலையில், இங்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தொகுதி- 4, தொகுதி- 2 தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன. இதில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலா் பிரபாவதி, வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணன், காமராஜ், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சக்திவேல், பிரபு பாண்டியன், நாம் முதல்வா் திட்டப் பயிற்றுநா்கள் காா்த்திக், முருகேசன், ஊராட்சித் தலைவா் அமுதா, முன்னாள் தலைவா் செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.