முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

அரசுப் பணி: இலவசப் பயிற்சி

இளைய தலைமுறையினர் ஒரு ரூபாய்கூட செலவழிக்காமல் அரசுப் பணிகளுக்குச் செல்லலாம் என்ற நம்பிக்கையை தென்பரை இலவசப் பயிற்சி மையம் அளிக்கிறது.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 10:33 PM
பகிர்:

'இளைய தலைமுறையினர் ஒரு ரூபாய்கூட செலவழிக்காமல் அரசுப் பணிகளுக்குச் செல்லலாம் என்ற நம்பிக்கையை தென்பரை இலவசப் பயிற்சி மையம் அளிக்கிறது. பயிற்சி பெறுவோரின் கடின உழைப்பால் தேர்ச்சியும் கிடைக்கிறது. எனது பணி ஓய்வுக்கு முன்னர் பயிற்சி மையத்துக்குச் சொந்தக் கட்டடம் கட்டி, முழு நேரமும் பயிற்சி வகுப்புகளை நடத்துவேன்' என்கிறார் கோட்டூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் நா.சுப்ரமணியன்.

இவர் திருவாரூர் மாவட்டத்துக்கு உள்பட்ட மன்னார்குடியை அடுத்த கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட போக்கு வரத்து வசதிகள் குறைந்த தென்பரை கிராமத்தில், ஏழை, எளியக் குடும்பத்தைச் சேர்ந்தோரின் அரசு வேலை கனவை நிறைவேற்றும் வகையில் இலவசப் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார்.

சிறு கிராமத்தில் பெரும் தொண்டறப் பணியை மேற்கொண்டுவரும் சுப்ரமணியனிடம் பேசியபோது 'நான் பி.எஸ்ஸி., எம்,எட். படித்துவிட்டு, சிங்கப்பூருக்குச் சென்று தனியார் நிறுவனத்தில் 4 ஆண்டுகள் பணியாற்றினேன். அங்கிருந்து ஊர் திரும்பி, விவசாயப் பணியில் ஈடுபட்டேன். திருமணமானது. அரசுப் பணி ஆசையை நிறைவேற்றுவதற்காக, போட்டித் தேர்வை இருமுறை எழுதியும், தேர்ச்சி பெறவில்லை. என் மனைவி மோகனவள்ளியின் நகைகளை விற்று, தஞ்சாவூரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் 2006- ஆம் ஆண்டில் சேர்ந்தேன். 2007-இல் தேர்ச்சி பெற்று, முத்துப்பேட்டை ஒன்றியத்தில் ஆசிரியர் பயிற்றுநராகச் சேர்ந்தேன். பின்னர், எம்.எஸ்ஸி., எம்.ஏ. தமிழ் பட்டங்களையும் பெற்றேன்.

Advertisement

என்னிடம் நகைகள் இருந்ததால் அதனை விற்று, பணம் திரட்டி தனியார் பயிற்சி மையத்தில் படித்தேன். ஏழைக் குடும்பங்களை சேர்ந்தவர்களால் எப்படி முடியும் என்ற யோசனை எனக்குள் தோன்றியது. இதற்காக, 2016- இல் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4-க்கான பயிற்சியை சிறிய அளவில் தொடங்கினேன். இதற்கு, வாட்டார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சு.வைரமுத்து,கூட்டுறவு அலுவலர் இலக்கியநாயகன், பயிற்சியாளர்கள் மூ.சீத்தாலெட்சுமி, த.மீனாட்சிசுந்தரம், கு.அன்புச்செல்வி உள்ளிட்டோர் தன்னார்வத்துடன் உதவினர்.

எனது தந்தை எஸ்.நாராயணசாமி தானமாக வழங்கிய இடத்தில் அமைந்திருந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அரசு விடுமுறை நாள்களில் இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்திட அப்போது தலைமை ஆசிரியராக இருந்த இரா.ஜெயகுமார் அனுமதியளித்தார். இப்போதைய தலைமை ஆசிரியராக இருக்கும் என்.ஜெயந்தியும் பணிகளுக்கு உறுதுணையாக இருக்கிறார். இந்த மையம் 10 ஆண்டுகளைக் கடந்துள்ளது.

40 பேர் பணியில்...

முதல்முறை நடத்தப்பட்ட பயிற்சியில் 32 பெண்கள் உள்பட 40 பேர் குரூப் 4 தேர்வுக்கு பயிற்சி பெற்றனர். யாரும் தேர்ச்சி பெறவில்லை. 2017-18-இல் குரூப் 4 தேர்வில் பெண்கள் 111 உள்ளிட்ட 157 பேர் தேர்வை எழுதினர். இதில், ரெ.அமுதா தேர்ச்சி பெற்று, கோவை நீதிமன்றத் தலைமை எழுத்தர் பணியில் இணைந்தது எங்கள் பணிக்கான அங்கீகாரமாக அமைந்தது.

2018-19-இல் குரூப் 2 தேர்வை 20 பேர் எழுதினர். கரோனா காலத்தில் இணையவழியில் வகுப்புகள் தொடர்ந்தன. பின்னர், மீண்டும் நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. 10 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இதுவரை குரூப் 4-இல் 20 பேர், சென்னை உயர்நீதிமன்றப் பணியில் 6 பேர், அஞ்சல் துறையில் 3 பேர், ஆசிரியர் பணியில் 6 பேர், காவலர் பணியில் ஒருவர், ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தேர்வில் (டெக்னிக்கல் சிவில் தேர்வு), கூட்டுறவுத் துறை தேர்வில் 2 பேர் என மொத்தம் 40 பேர் பணியில் இணைந்துள்ளனர். நிகழாண்டில் 106 பெண்கள் உள்ளிட்ட123 பேர் பயிற்சியில் உள்ளனர்.

2025 நவம்பரில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வின் இரு நாள்களை எங்கள் மையத்தில் பயிற்சி பெற்ற 114 பேர் எழுதினர். இவர்களில் 89 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். எங்கள் மையத்தில் பயிற்சி பெறுவோரை ஐ.ஏ.எஸ்., குரூப் 1, குரூப் 2 தேர்வுகளில் தேர்ச்சி பெற வைத்து அவர்களை அரசு உயர் பதவிகளில் அமர வைக்க வேண்டும்.

பயிற்சி பெறுவோர் வருகை

18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் நேரடி பயிற்சிக்கு வருகின்றனர். திருமணமாகி குடும்பப் பொறுப்பை ஏற்றிருக்கும் பெண்கள் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் நேரடி வகுப்பு பங்கேற்க முடியாததால் யூடியூப் வழியில் பயிற்சி பெறுகின்றனர். யாரிடமும் எந்தத் தொகையும் வாங்காமல் என் சொந்த செலவில் மையத்தை நடத்தி வருகின்றேன். வாரம்தோறும் மாதிரித் தேர்வு நடத்தப்படுகிறது. ரோட்டரி சங்கத்தினர் உதவுகின்றனர். பயிற்சி பெற்று பணியில் இணைந்த 4 பேரும் மாதம் ஒருமுறை நன்கொடையை வழங்குகின்றனர். திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தோர் பேருந்துகளிலும், இரு சக்கர வாகனத்திலும் வந்துவிடுகின்றனர். இந்த ஊரிலேயே உணவகம் நடத்துவோர் பயிற்சிக்கு வருபவர்களுக்கு மட்டும் சலுகை விலையில் மதிய உணவு வழங்குகின்றனர்.

பயிற்சி மையத்தில் பயின்ற ஜான்சி எமிலி மன்னார்குடி வட்டாரக் கல்வி அலுவலராகவும், த.விக்ரம் நாகப்பட்டினத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றுவதையும் பார்க்கும்போது மனதில் உற்சாகம் ஏற்படுகிறது. பணியில் இணைந்தவர்களைச் சந்திக்கும்போது, 'வீடு கட்டியுள்ளேன். திருமண ஏற்பாடு வீட்டில் நடக்கிறது' எனச் சொல்வதைக் கேட்டும்போது மனநிறைவு அடைகிறது.

எனது பணிகளுக்கு நண்பர்கள், மனைவி மோகனவள்ளி, பிஎஸ்ஸி நர்சிங் பயிலும் மகள் மெய்யழகி, கொரடாச்சேரி அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மகன் யுகன் உள்ளிட்டோர் உறுதுணையாக இருக்கின்றனர்' என்கிறார் நா.சுப்ரமணியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments