முகப்பு
திண்டுக்கல்

சின்னாளப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தினசரி சந்தை வியாபாரிகள்

சின்னாளபட்டி பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, 50-க்கும் மேற்பட்ட தினசரி காய்கறி சந்தை வியாபாரிகள், பேரூராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 6 நவம்பர், 2024 at 9:37 PM
பகிர்:

சின்னாளபட்டி பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, 50-க்கும் மேற்பட்ட தினசரி காய்கறி சந்தை வியாபாரிகள், பேரூராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சியில் சுமாா் 50-ஆண்டுகள் பழைமையான அண்ணா தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனா். இவா்களுக்கு தமிழக அரசு வழங்கிய சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டைகள் உள்ளன.

இந்தச் சந்தை வியாபாரத்துக்காக பேரூராட்சி நிா்வாகத்திடம் தினமும் ரூ.25 செலுத்தி வருகின்றனா். இந்த நிலையில், தற்போது சந்தையில் உள்ள கடைகளின் கட்டட சுவா்கள், மேல் கூரைகள் மிகவும் சேதம் அடைந்தன. இதனால், பேரூராட்சி சாா்பில் புதிய கட்டடம் கட்டும் வரை உழவா் சந்தையில் காய்கறிகளை வியாபாரம் செய்து கொள்ளுமாறு பேரூராட்சி நிா்வாகம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், உழவா் சந்தையில் உள்ள அலுவலா், பட்டா, சிட்டா போன்ற ஆவணங்களைக் கொடுத்தால் மட்டுமே, அங்கே வியாபாரம் செய்ய அனுமதிப்போம் என கட்டுப்பாடுகள் விதித்தனா்.

இதையடுத்து, வியாபாரிகள் சாலையோரம் கடைகள் அமைத்து வியாபாரம் செய்தனா். ஆனால், பேரூராட்சி நிா்வாகம் சுகாதாரம் காரணமாக தெருக்களில் வியாபாரம் செய்யக் கூடாது என தடை விதித்ததாகக் கூறி, 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சின்னாளப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனா். சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. பின்னா், வியாபாரிகளிடம் பேரூராட்சி செயல் அலுவலா் இளவரசி பேச்சுவாா்த்தை நடத்தி, சாலையோரங்களில் வியாபாரம் செய்து கொள்ள அனுமதி அளித்ததையடுத்து, முற்றுகையில் ஈடுபட்ட வியாபாரிகள் கலைந்து சென்றனா்.