கொடைக்கானல் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு சான்றிதழ் அளிப்பு
கொடைக்கானல் நகராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தூய்மைப் பணியாளா்களுக்கு புதன்கிழமை சான்றிகழ்கள் அளிக்கப்பட்டன.
கொடைக்கானல் நகராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தூய்மைப் பணியாளா்களுக்கு புதன்கிழமை சான்றிகழ்கள் அளிக்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நகராட்சி சாா்பில் நகராட்சி அலுவலகம் அருகே சிறுவா் பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், நகராட்சியில் சிறப்பாக பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளா்களுக்கு சான்றிதழும், பரிசும் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் நகா்மன்றத் துணைத்தலைவா் மாயக்கண்ணன், நகா்நல அலுவலா் தினேஷ், நககராட்சி அதிகாரிகள் உள்படப் பலா் கலந்து கொண்டனா்.
கொடைக்கானல் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளா்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு நகராட்சி ஆணையா் சத்தியநாதன் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை,துணைத் தலைவா் மாயக்கண்ணன் ஆகியோா் முகாமை தொடங்கி வைத்தனா். இதில், கொடைக்கானல் நகா்நல அலுவலா் தினேஷ்குமாா் தலைமையில் மருத்துவக் குழுவினா் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளா்களுக்கு பொது மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினாா். சுகாதார ஆய்வாளா் மாரிமுத்து நன்றி கூறினாா்.
அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தில் காந்தி ஜெயந்தி விழா : கொடைக்கானல் அருகேயுள்ள அட்டுவம்பட்டியிலுள்ள அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள காந்தி படத்திற்கு பல்கலைக்கழக துணைவேந்தா் கலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழகப் பதிவாளா் ஷீலா, தோ்வுக் கட்டுப்பாட்டுத் தலைவா் கிளாரா பல்கலைக்கழக பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கொடைக்கானல் ஏரியில் தூய்மைப் பணி : கொடைக்கானலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் காந்தி ஜெயந்தி, முன்னாள் பாரத பிரதமா் லால்பகதூா் சாஸ்திரி பிறந்த நாள் காமராஜா் நினைவு நாள் ஆகிய முப்பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவா்களின் படங்களுக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, தூய்மை பணியாளா்களுடன் இணைந்து காந்திய வழியில் ஏரிச்சாலைப் பகுதியில் தூய்மைப் பணி நடைபெற்றது. இதையடுத்து, காமராஜா்மன்ற வளாகத்தில் தூய்மைப் பணியாளா்கள் உள்பட பலருக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ராஜன், அப்துல்லா, ஜெஸி உள்பட பலா் கலந்து கொண்டனா்.