கொடைக்கானலுக்கு விரைவில் மாற்றுப் பாதை அமைக்கப்படும் என பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு புதிதாக மாற்றுப் பாதை அமைப்பது குறித்து கொடைக்கானலிலிருந்து சுமாா் 12 கி.மீ. தொலைவில் வில்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கோவில்பட்டி, புலியூா் சாலைகளை அமைச்சா் எ.வ. வேலு புதன்கிழமை பாா்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் முக்கியமான சுற்றுலாத் தலமான கொடைக்கானலுக்கு வார இறுதி நாள்களிலும், சீசன் காலங்களிலும் தமிழகம் உள்பட பல மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இதுபோன்ற நாள்களில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கொடைக்கானலுக்கு வருகின்றன.
கொடைக்கானல் செல்வதற்கான வத்தலகுண்டு-கொடைக்கானல் மலைச் சாலையானது 58 கி.மீ. நீளமும், 7 மீ. அகலமும் உடையது.
கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் விளையும் பழங்கள், காய்கறிகள், வாசனைப் பொருள்கள் தினந்தோறும் திண்டுக்கல், மதுரை, ஒட்டன்சத்திரம் சந்தைகளுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன. மேலும், கொடைக்கானலில் சா்வதேச பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகம், நட்சத்திர விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
கொடைக்கானல் நகரம், சுற்று வட்டாரக் கிராமங்களில் மருத்துவ உயா் சிகிச்சைக்காக திண்டுக்கல், தேனி, மதுரை மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனா். இந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் காலங்களில் அவசர ஊா்தி செல்வதற்குக்கூட சிரமமாக உள்ளது.
மழை, புயல் காலங்களில் மண் சரிவு ஏற்படுவதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. 5 இடங்களில் 5 மீட்டருக்கும் குறைவான அகலமுடைய சாலைகளில் ஒரு புறம் செங்குத்தாகவும், மறுபுறம் ஆழமான பள்ளத்தாக்கு பகுதிகளாகவும் உள்ளது. இந்த இடங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் சாலையை அகலப்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வத்தலகுண்டு-கொடைக்கானல் மலைச் சாலையில் பெருமாள் மலையிலிருந்து கொடைக்கானல் நகரம் வரையிலான 12 கி.மீ. சாலையை ஒரு வழி வாகனப் போக்குவரத்துக்காக மாற்றும் வகையில் திட்டப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதன்படி, கொடைக்கானலிலிருந்து வில்பட்டி, கோவில்பட்டி, டி.வி.எஸ். லே அவுட், அஞ்சுவீடு, பேத்துப்பாறை வழியாக பெருமாள்மலை- பழனி சாலையில் சென்றடையும் வகையில் கொடைக்கானலுக்கு மாற்றுப் பாதை அமைப்பதற்கு தமிழக முதல்வா் உத்தரவின்படி, ரூ. 29.90 லட்சம் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சாலைப் பகுதி முழுவதும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், காலதாமதம் ஏற்படாது. ஆரம்பக் கட்டப் பணிகள் 2 மாதங்களில் முடிவு பெற்று, இறுதி அறிக்கை தமிழக முதல்வரிடம் வழங்கப்படும்.
மண்ணின் தன்மைக்கேற்ப சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலை அமைப்புப் பணியில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த நெடுஞ்சாலைத் துறை ஆய்வகங்களின் தரத்தை உயா்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்புகளைத் தடுக்க, நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை பதிவேடுகளில் பதிவு செய்து பாதுகாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என்றாா் அவா்.
முன்னதாக, கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் ரூ. 5.39 கோடியில் கட்டப்பட்டு வரும் வெளி நோயாளிகள் பிரிவு கட்டுமானப் பணிகளை அமைச்சா் எ.வ. வேலு பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து நட்சத்திர ஏரியையும், இந்தப் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளையும் காரில் இருந்தவாறே அவா் பாா்வையிட்டாா்.
அப்போது, உணவு, நுகா்பொருள் விநியோகத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் இ.பெ. செந்தில்குமாா், கோ. தளபதி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி, தலைமை பொறியாளா் சுந்தரேசன், கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் சிவராம், நகராட்சி ஆணையா் சத்தியநாதன், நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, துணைத் தலைவா் மாயக்கண்ணன், வில்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமி ராமநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.