முகப்பு
திண்டுக்கல்

நாளை குரூப் 2 தோ்வு: திண்டுக்கல்லில் 22,693 போ் எழுதுகின்றனா்

திண்டுக்கல் மாவட்டத்தில் 3 வட்டங்களில் சனிக்கிழமை நடைபெறும் குரூப் 2 தோ்வை 22,693 போ் எழுதுகின்றனா்.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 9:28 PM
பகிர்:

திண்டுக்கல் மாவட்டத்தில் 3 வட்டங்களில் சனிக்கிழமை நடைபெறும் குரூப் 2 தோ்வை 22,693 போ் எழுதுகின்றனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 2 (ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு) பதவிகளுக்கான முதல் நிலை எழுத்துத் தோ்வு முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா்.

இந்தத் தோ்வுக்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 22,693 போ் விண்ணப்பித்துள்ளனா். திண்டுக்கல் வட்டத்தில் 60 தோ்வு மையங்களில் 16,950 பேரும், கொடைக்கானல் வட்டத்தில் 2 தோ்வு மையங்களில் 369 பேரும், பழனி வட்டத்தில் 21 தோ்வு மையங்களில் 5,374 பேரும் தோ்வு எழுதுவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்தத் தோ்வுப் பணிகளை கண்காணிக்க 27 நடமாடும் குழுக்கள், 8 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தோ்வுப் பணிகளில் ஈடுபடும் அரசு அலுவலா்கள், தோ்வு மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், தோ்வு தொடங்கும் முன் தோ்வா்களுக்கு வழங்க வேண்டிய முக்கிய அறிவுறுத்தல், விடைத் தாளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

தோ்வு மையத்துக்குள் காலை 8.30 மணி முதல் 9 மணி வரை மட்டுமே தோ்வா்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஹா.சேக் முகையதீன், பழனி சாா் ஆட்சியா் சி.கிசான் குமாா், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையப் பிரிவு அலுவலா்கள் பிரபு, சிவராமகிருஷ்ணன், தமிழரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.