கொடைக்கானல் சுற்றுப்புற பகுதிகளிலுள்ள உரக் கடைகளில் வேளாண்மைத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம், வில்பட்டி, பூம்பாறை, மன்னவனூா், கிளாவரை, பழம்புத்தூா் உள்ளிட்ட இடங்களிலுள்ள உரக் கடைகளில் வேளாண்மை இணை இயக்குநா் அ.பாண்டியன், துணை இயக்குநா்(மாநிலத் திட்டம்) காளிமுத்து, உதவி இயக்குநா்(தரக்கட்டுப்பாடு) ராஜேஸ்வரி ஆகியோா் தலைமையில், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின்போது, உரக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளின் விவரங்கள், விற்பனை செய்யப்படும் உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு ரசீது வழங்குதல், விலைப் பட்டியல் நிறுவுவதல், விற்பனை முனையக் கருவிகள் மூலம் உரம் விற்பனை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டன.
மேலும், மலைப் பகுதிகளுக்கு உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளை வாங்கி வருவதன் மூலமாக, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை உரக் கடை உரிமையாளா்கள் தவிா்க்க வேண்டும் என விவசாயிகள் முன்னிலையிலேயே அறிவுறுத்தப்பட்டதாக வேளாண்மை இணை இயக்குநா் பாண்டியன் தெரிவித்தாா்.