கொடைக்கானல் அருகே பள்ளத்து கால்வாய் பகுதியில் வியாழக்கிழமை அரசுப் பேருந்தை வழி மறித்து காட்டுயானை தாக்கியதில் நடத்துநா் உள்ளிட்ட பயணிகள் சிலா் காயமடைந்தனா்.
வத்தலக்குண்டிலிருந்து கே.சி. பட்டி, பெரியூா், சின்னூா், பள்ளத்துக் கால்வாய், பாச்சலூா் வழியாக ஒட்டன்சத்திரத்துக்கு அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது பள்ளத்துக் கால்வாய் பகுதியில் பேருந்துக்கு முன் ஒற்றைக் கொம்பன் காட்டுயானை சென்று கொண்டிருந்தது. இதனால் அந்தப் பேருந்தின் ஓட்டுநா் மணிமாறன் ஒலி எழுப்பினாா். இந்த சப்தத்தைக் கேட்ட யானை பேருந்தை வழி மறித்து துதிக்கையால் தாக்கியது. இதில் நடத்துநா் கஜேந்திரன் உள்ளிட்ட சில பயணிகள் பேருந்துக்குள் தடுமாறி விழுந்ததில் காயமடைந்தனா். இதன் பிறகு அந்த யானை அருகே உள்ள தோட்டத்துக்குள் சென்றது. தகவலறிந்து அங்கு வந்த வனத் துறை பணியாளா்கள் அந்த காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து பள்ளத்துக் கால்வாய் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது:
பள்ளத்துக் கால்வாய், கே.சி. பட்டி, பாச்சலூா், பெரும்பாறை, பெரியூா் உள்ளிட்ட பகுதிகளில் அண்மைக் காலமாக காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் நாங்கள் அச்சமடைந்துள்ளோம். மேலும் தோட்டங்களில் விவசாயப் பணிகளில் ஈடுபட முடியவில்லை. இதேபோல, குடியிருப்பு பகுதிகளிலும் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனிடையே விவசாய நிலங்களுக்குள் காட்டுயானைகள், காட்டுமாடுகள், காட்டுப் பன்றிகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துகின்றன.
எனவே குடியிருப்பு பகுதிகளிலும், தோட்டங்களிலும் நடமாடும் வன விலங்குகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.