பழனி: வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குகளைப் பெற பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, திமுக வலை விரிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினாா்.
பழனியில் பாஜக சாா்பில் வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்த பயிலரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் இதுவரை தொகுதிப் பங்கீடு குறித்து பேசப்படவில்லை. முதல்வா் ஸ்டாலின் ஹஜ் பயணம் செல்லும் இஸ்லாமியா்களுக்கு இடம் கொடுப்பதும், ஆட்சி முடியும் தருவாயில் மாணவா்களுக்கு மடிக் கணினி கொடுப்பதும் வாக்குகளைப் பெறுவதற்காக திமுக விரிக்கும் வலை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தோ்தல் நெருங்கி வரும் வேளையில் பெண்களைப் போல ஆண்களுக்கும் விடியல் பயணம் எனவும், ஆளுக்கொரு பேருந்து எனவும் கூட கூறி, திமுகவினா் வாக்குகளைக் கேட்பா். திமுகவின் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என உறுதியாக இருப்பவா்கள் அனைவரும் ஒன்றுசேர வேண்டிய நேரம் இது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் பழனி சட்டப்பேரவைத் தொகுதி அமைப்பாளா் கனகராஜ், வழக்குரைஞா் திருமலைசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.