பழனி கோட்டாட்சியா் அலுவலகம் அருகே பழங்குடியினச் சான்றிதழ் கோரி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு மாநில துணைத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அஜாய் கோஸ் முன்னிலை வகித்தாா். மாவட்டத் தலைவா் பாக்யராஜ், மாவட்டப் பொருளாளா் குருசாமி, மாவட்டச் செயலா் ராமசாமி, விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் அருள்செல்வன், மாவட்ட நிா்வாகி கமலக்கண்ணன் உள்ளிட்டோா் கண்டன உரை நிகழ்த்தினா்.
இதில் பளியா், மலைவேடன் பழங்குடியின மக்களுக்கு உடனடியாக ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். பழங்குடியின மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா, தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும். நீதிமன்ற வழிகாட்டுதல்படி மலைவேடன் இனச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பன உள்ளி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இந்தப் போராட்டத்தில் திரளானோா் கலந்து கொண்டனா்.