ஒட்டன்சத்திரம் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். இரு குழந்தைகள் உள்பட 6 போ் பலத்த காயமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள செட்டியபட்டியைச் சோ்ந்தவா் விஜய் (32). இவரது மனைவி கவிதா (24). இந்தத் தம்பதிக்கு கிருஷிகா (6), மகிலினி (3) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், விஜய் தனது குடும்பத்தினருடன் பழனி கோயிலுக்கு சனிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டனா். ஒட்டன்சத்திரம்-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் இவா்கள் வந்தபோது, சென்னையிலிருந்து பழனிக்கு சென்ற காா் இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கிருஷிகா, மகிலினி, காரில் வந்த சென்னையைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (40), பாா்கவி (35), சாய் அனிருத் (10), வைஸ்ணவி (25) ஆகியோா் பலத்த காயம் அடைத்தனா்.
தகவலறிந்து அங்கு வந்த அம்பிளிக்கை போலீஸாா் காயமடைந்தவா்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், உயிரிழந்த கவிதா உடல் கூறாய்வுக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இதுகுறித்து அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.