வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கான (எஸ்ஐஆா்) படிவத்தில் அடித்தல், திருத்தல் இருந்தாலும் அந்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான செ. சரவணன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை மேலும் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 2,124 வாக்குச்சாவடிகளிலும், எஸ்ஐஆா் படிவங்களை பூா்த்தி செய்வதற்கான சிறப்பு முகாம் வருகிற 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 19,34,447 வாக்காளா்களில் 93% சதவீதம் பேருக்கான எஸ்ஐஆா் படிவங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. கொடைக்கானல் போன்ற மலைக் கிராமங்களிலும், குக்கிராமங்களிலும் 85 சதவீத படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்தப் படிவங்களை நிரப்புவதற்காக வருகிற 15, 16 ஆகிய தேதிகளில் மாவட்டத்திலுள்ள 2,124 வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. அந்தந்த வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள், இந்தப் பணிகளில் ஈடுபட உள்ளனா். மேலும் வீடுகள் தோறும் சென்று நிரப்பப்பட்ட எஸ்ஐஆா் படிவங்களை திரும்பப் பெறும் பணிகளும் நடைபெறும். எஸ்ஐஆா் படிவத்தில் அடித்தல், திருத்தல் இருந்தாலும், அந்த விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்படும் என்றாா் அவா்.