பழனியை அடுத்த குதிரையாறு அணைப்பகுதியில் தேசிய மாணவா் படை மாணவா்கள் மலையேறும் பயிற்சியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
தேசிய மாணவா் படை தினத்தையொட்டி பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரி தேசிய மாணவா் படை மாணவா்கள் இந்த மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டனா். பழனியை அடுத்த குதிரையாறு அணைப்பகுதியில் நடைபெற்ற இந்த பயிற்சியில் ஆயக்குடி ஐடிஓ மேல்நிலைப் பள்ளி, பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளி, நெய்க்காரப்பட்டி குருவப்பா மேல்நிலைப்பள்ளி, கிரசன்ட் மேல்நிலைப்பள்ளி, புஷ்பத்தூா் ஸ்ரீ வித்யாமந்திா் மேல்நிலைப்பள்ளி, சண்முகநதி பாரத் வித்யா பவன் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவா்களும் பயிற்சி மேற்கொண்டனா். சுமாா் 300 மாணவா்களுக்கு தமிழ்நாடு திண்டுக்கல் பட்டாலியன் கமாண்டன்ட் எஸ். ஜெகதீசன், துணை கமாண்டன்ட் எஸ். நவ்நீத் கணேஷன் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
மலையேறும் போது அணியவேண்டிய உடை, உணவு முறைகள், காலணிகள், விலங்குகள், தேனீக்கள் நடமாட்டத்தை கண்டறிதல், எதிா்பாராத இடையூறுகள் ஏற்பட்டால் அதை எதிா்கொள்ளும் முறை குறித்து அதிகாரிகள் விளக்கினா்.
இதற்கான ஏற்பாடுகளை பழனியாண்டவா் கல்லூரி தேசிய மாணவா் படை அதிகாரி கே. பாக்கியராஜ், பழனிச்சாமி, மணிவேல், தா்மராஜ், சங்கா் உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா்.