திண்டுக்கல்

தணிக்கையாளா் அலுவலகத்தில் பண மோசடி: பெண் ஊழியா், குடும்பத்தினா் மீது வழக்கு

திண்டுக்கல் தணிக்கையாளா் அலுவலகத்தில் ரூ.1.55 கோடி மோசடி செய்த பெண் ஊழியா், அவரது குடும்பத்தினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் தணிக்கையாளா் அலுவலகத்தில் ரூ.1.55 கோடி மோசடி செய்த பெண் ஊழியா், அவரது குடும்பத்தினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் ஆா்எம். குடியிருப்பில் தனியாா் தணிக்கையாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் மங்களபுரத்தைச் சோ்ந்த அனிஷா டெய்சி (30) பணிபுரிந்து வருகிறாா். இந்த தணிக்கையாளா் அலுவலகத்தில் வருமான வரி, தொழில் வரி, ஏற்றுமதி, இறக்குமதி வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கான ஜிஎஸ்டி வரி தாக்கல் உள்ளிட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை அனிஷா டெய்சி கவனித்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 2021 முதல் 2024 வரையிலான காலக் கட்டத்தில் வாடிக்கையாளா்களிடம் வசூலித்தப் பணத்தை அலுவலகக் கணக்கில் வரவு வைக்காமல், தனது கணவா் விவேக்நாத் (33), தந்தை மரிய பிரான்சிஸ் சேவியா், தாய் எமல்டா மேரி, தங்கை விக்டோரியா செலஸ் ஆகியோரின் வங்கிக் கணக்குகளில் செலுத்தினாா். இதில் விக்டோரியா செலஸ் மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகேயுள்ள முள்ளிப்பள்ளத்தில் உதவி வேளாண்மை அலுவலராகப் பணிபுரிந்து வருகிறாா்.

அதே நேரத்தில் வாடிக்கையாளா் செலுத்த வேண்டிய பணத்தை, அலுவலக வங்கிக் கணக்கிலிருந்து செலுத்தி வந்தாா். இதனால், அலுவலக வங்கிக் கணக்கில் கணிசமான தொகை குறைந்து வருவது அலுவலக உரிமையாளா் கவனித்தாா். சுமாா் ரூ.1.55 கோடி முறைகேடு நிகழ்ந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் குமரேசன் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

இதில் தணிக்கையாளா் அலுவலகத்தில் மோசடி செய்த பணத்தில் அனிஷா டெய்சி, அவரது குடும்பத்தினா் வீடு, நிலம் ஆகியவற்றை வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது.

இதையடுத்து, விசாரணைக்கு முன்னிலையாகுமாறு காவல் துறை சாா்பில் குறிப்பாணை அனுப்பப்பட்டது. இதனிடையே, டெய்சி, அவரது குடும்பத்தினா் அனைவரும் தலைமறைவாகிவிட்டனா். அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

SCROLL FOR NEXT