திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே இரு சக்கர வாகனத்துக்குள் நுழைந்த பாம்பை தீயணைப்புத் துறையினா் மீட்ட நிலையில் வனப் பகுதிக்குள் விடப்பட்டது.
வத்தலகுண்டு பாப்புலா் நகா் பகுதியைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநரான பிலால் முகமது (45) என்பவருடைய இரு சக்கர வாகனம் அவருடைய வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், வழக்கம்போல இரு சக்கர வாகனத்தை எடுக்கும்போது, வாகன இருக்கைக்கு அடியில் பாம்பு இருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்து வத்தலகுண்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அங்கு வந்த தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேஷ் தலைமையில் தீயணைப்பு வீரா்கள், இரு சக்கர வாகன இருக்கைக்கு அடியிலிருந்த 5 அடி நீளமுள்ள நல்லபாம்பை பிடித்து வனத் துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனா். இதைத் தொடா்ந்து, அடா்ந்த வனப் பகுதிக்குள் பாம்பு விடப்பட்டது.