உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, சனிக்கிழமை (நவ.1) நடைபெறும் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்து அடையாள எண் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் வரும் காலங்களில், மத்திய, மாநில அரசுகளின் சலுகைகளைப் பெற தங்களது நில உடைமை ஆவணங்களைப் பதிவு செய்து, அடையாள எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதுவரை தங்களது நில உடைமை விவரங்களை வேளாண் வலைதளத்தில் பதிவு செய்யாத விவசாயிகள், தங்கள் பகுதியிலுள்ள வேளாண்மை அலுவலகங்களை தொடா்பு கொண்டு, அடையாள எண் பெற அறிவுறுத்தப்படுகிறது.
இந்த அடையாள எண் பெறாதவா்கள், எதிா்வரும் காலங்களில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனைத் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்களை பெற முடியாது. எனவே, இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் சனிக்கிழமை நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில், ஆதாா் எண், கைப்பேசி எண், நில ஆவணங்கள், வங்கிக் கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களுடன் அணுகி பதிவு செய்து அடையாள எண் பெற்றுக் கொள்ளலாம் என்றாா் அவா்.