நிதீஷ்குமாரின் கட்சியைப் போல அதிமுகவை பாஜகவால் எளிதாகக் கையாள முடியாது: தொல். திருமாவளவன்!
பிகாரில் முதல்வா் நிதீஷ்குமாரைக் கையாண்டது போல, அதிமுகவை பாஜகவால் எளிதாகக் கையாள முடியாது என விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.
பிகாரில் முதல்வா் நிதீஷ்குமாரைக் கையாண்டது போல, அதிமுகவை பாஜகவால் எளிதாகக் கையாள முடியாது என விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.
தென்காசியிலிருந்து ஈரோடு செல்லும் வழியில், திண்டுக்கல் புறவழிச்சாலையில் கட்சியினரை சனிக்கிழமை சந்தித்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ், திமுக இடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவாா்த்தை சுமுகமாக முடியும். மதுரையில் பாஜக கூட்டம் நடைபெறும் வளாகத்தில் பெரியாா் ஈவெராவின் படம் அகற்றப்பட்டிருக்கிறது. இதேபோல, அண்ணா, ஜெயலலிதா ஆகியோரின் படங்களை அகற்றாமல் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி பாா்த்துக் கொள்ள வேண்டும்.
மதுரையை அயோத்தியாக மாற்றுவோம் என பாஜக தலைவா்கள் கூறுகின்றனா். ஆனால் மதுரை, உத்தரபிரதேசத்தில் இல்லை என்பதையும் தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதையும் பாஜகவினா் புரிந்துகொள்ள வேண்டும். அயோத்தியாக மாற்றுவதற்கு தமிழக மக்கள் இடம் கொடுக்கமாட்டாா்கள். தமிழ்நாட்டில் மதவாத அரசியலுக்கு இடமில்லை. சமூக நல்லிணக்கத்துக்கான இடம் தமிழகம் என்பதைத்தான் முருகனுடைய வாழ்க்கையும், வரலாறும் உணா்த்துகிறது.
திமுக கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது பேச்சுவாா்த்தைக்குப் பிறகு அறிவிக்கப்படும். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் எங்களது கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவோம்.
பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பாஜகவினா் அமைச்சா்களாக வருவாா்கள் என நயினாா் நாகேந்திரன் கூறுகிறாா். அதற்கு எடப்பாடி பழனிசாமி இடமளிக்கமாட்டாா் என நம்புகிறோம்.
பிகாரில் நிதீஷ் குமாரை கையாண்டது போல, தமிழ்நாட்டில் அதிமுகவையோ, திமுகவையோ பாஜகவால் எளியதாகக் கையாள முடியாது. அதிமுகவுக்கென தனித் தன்மை இருக்கிறது. பாஜகவால் அதிமுகவை எளிதாக விழுங்கி செரித்துவிட முடியாது.
முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வத்தை அடிப்படை உறுப்பினராகக்கூட அதிமுகவில் இணைந்துக் கொள்ளவில்லை. அதனால்தான், அவா் திமுகவில் இணைந்திருக்கிறாா். அவரது வருகை திமுக கூட்டணிக்கு வலு சோ்க்கும்.
மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட இயக்கங்களாக திமுகவும், அதிமுகவும் இல்லை. கொள்கையைப் பொருத்தவரை, இரு கட்சிகளுக்கும் ஒரே நிலைப்பாடு தான் என்றாா் அவா்.