திண்டுக்கல்: முந்தூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த மாரம்பாடி புனித பெரிய அந்தோணியாா் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த மாரம்பாடியில் புனித பெரிய அந்தோணியாா் ஆலயப் பெருவிழா ஆண்டுதோறும் தை முதல் வாரத்தில் 3 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்த விழாவுக்கு வேடசந்தூா், திண்டுக்கல் சுற்றுப் புற பகுதி மக்கள் மட்டுமன்றி, வெளியிடங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து வழிபாடு நடத்தி வருகின்றனா்.
இந்த வகையில், நிகழாண்டுக்கான பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, பெரிய அந்தோணியாரின் சொரூபம் பொறிக்கப்பட்ட கொடி ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு ஆலயக் கொடி மரத்தில் இரவு 10 மணிக்கு ஏற்றப்பட்டது.
பின்னா், மாரம்பாடி சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த ஊா் முக்கியஸ்தா்களுக்கு மாலை சந்தனம், வெற்றிலைப் பாக்கு வழங்கி அழைப்பு விடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மதுரை மாவட்ட முன்னாள் பேராயா் அந்தோணி பாப்புசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
திண்டுக்கல் மறை மாவட்ட பேராயா் தாமஸ்பால்சாமி, மறை வட்ட முதன்மை குருவும், மாரம்பாடி திருத்தல பங்குத் தந்தையுமான சுரேஷ் சகாயராஜ், உதவி பங்குத் தந்தை அமல்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை 5, 8, முற்பகல் 11, பிற்பகல் 3, 4, மாலை 6 மணி என 6 வேளை திருப்பலி நடத்தப்பட்டது. இதையடுத்து, மின்தோ் பவனி நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை பகல் தோ் பவனியுடன் திருவிழா நடைபெறுகிறது.