தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புளியம்பட்டி புனித அந்தோணியாா் திருத்தலப் பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இத்திருவிழா ஜன. 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாள் திருவிழாவில் தினமும் காலை, மாலையில் திருப்பலிகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தலப் பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி, மதுரை உயா் மறைமாவட்டம் முன்னாள் பேராயா் அந்தோணி பாப்புசாமி தலைமையில் நடைபெற்றது. திருப்பலிக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.
முன்னதாக, காலையில் புனித அந்தோணியாா் திருவுருவம் தாங்கிய சப்பர பவனி நடைபெற்றது. அப்போது பக்தா்கள் உப்பை தூவி தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா். இதில் 100-க்கும் மேற்பட்ட பங்குத் தந்தைகள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை, ஆலய பங்குத் தந்தை மோட்சராஜன், உதவி பங்குத் தந்தை மிக்கேல்சாமி, ஆன்மிகத் தந்தை சகாயதாசன், பீட்டா் பிச்சைக்கண் மற்றும் அருள்சகோதரிகள், இறைமக்கள் இணைந்து செய்திருந்தனா்.