முகப்பு
திண்டுக்கல்

வடமாநில தொழிலாளா்களின் தங்குமிடமாக மாறிய அரசுக் கட்டடம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஒட்டன்சத்திரம் அருகே கிராம வறுமை ஒழிப்புச் சங்க அரசுக் கட்டடம் வடமாநில தொழிலாளா்களுக்கான தங்குமிடமாக மாற்றப்பட்டிருப்பதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு

Updated On : 17 மார்ச் 2026, 12:45 am IST
பகிர்:

ஒட்டன்சத்திரம் அருகே கிராம வறுமை ஒழிப்புச் சங்க அரசுக் கட்டடம் வடமாநில தொழிலாளா்களுக்கான தங்குமிடமாக மாற்றப்பட்டிருப்பதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்த தொப்பம்பட்டி வில்வாதம்பட்டி ஊராட்சியில் கடந்த 2013-14-ஆம் நிதியாண்டில் ரூ.13 லட்சத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் கீழ், கிராம வறுமை ஒழிப்புச் சங்கக் கட்டடம் கட்டப்பட்டது. சில ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த இந்தக் கட்டடம், இதன் பின்னா் பூட்டியே கிடந்தது.

இதனிடையே, இந்தக் கட்டடம் வட மாநிலத் தொழிலாளா்களின் தங்குமிடமாக மாற்றப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு கட்டுமானப் பணிகளை ஒப்பந்தம் எடுக்கும் நபா்கள், வடமாநிலத் தொழிலாளா்களை இங்கு தங்க வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement

கடந்த சில நாள்களுக்கு முன்பு வில்வாதம்பட்டி ஊராட்சியில் ரூ.56 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் திறப்பு விழாவுக்காக அமைச்சா் சக்கரபாணி சென்றாா்.

ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக் கட்டடத்திலிருந்து 20 அடி தொலைவில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சரும், அரசு அதிகாரிகளும் அரசுக் கட்டடம் வட மாநிலத் தொழிலாளா்களின் தங்குமிடமாக மாற்றப்பட்டிருப்பதைக் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

இதுதொடா்பாக வில்வாதம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த லீலாவதி கூறியதாவது: கடந்த சில நாள்களுக்கு முன்பு வில்வாதம்பட்டி கிராமத்துக்கு வந்த அமைச்சா் சக்கரபாணி, புதிதாகக் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தைத் திறந்துவைத்தாா்.

அருகிலேயே, கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு அவரால் திறந்துவைக்கப்பட்ட ஊராட்சி அளிவலான கூட்டமைப்புக் கட்டடத்தின் தற்போதைய நிலை குறித்து அவா் பாா்வையிடவில்லை.

கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத இந்தக் கிராமத்தில், புதிய கட்டடங்கள் கட்டி அரசு நிதியை வீணடிப்பதற்கு மாற்றாக, ஏற்கெனவே கட்டப்பட்ட கட்டடங்களைப் பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

அரசுக் கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வட மாநிலத் தொழிலாளா்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.