மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் 1,100 மாணவ, மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பட்டம் வழங்கப்பட்டது.
தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு கல்லூரித் தலைவர் மற்றும் தாளாளர் கருமுத்து தி.கண்ணன் தலைமை வகித்துப் பேசுகையில், போட்டிகள் நிறைந்த உலகில் பட்டம் பெற்றுள்ள மாணவ, மாணவியர் தனித்திறமையை மேம்படுத்தி வேலைவாய்ப்புகளைப் பெறவேண்டும்.
வாய்ப்புகளை குடும்பம், சமுதாயம், தேசம் ஆகியவற்றின் முன்னேற்றத்துக்கு பயன்படுத்தவேண்டும் என்றார்.
அமரராஜா நிறுவன குழுமத் தலைவர் ராமசந்திரா என்.கல்லா நிகழ்த்திய பட்டமளிப்பு உரையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி அறிவு மேம்பாட்டின் அடிப்படையிலே கணிக்கப்படுகிறது. பொருளாதாரம், அறிவு மேம்பாடு அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது மக்கள் சக்திதான். சீனா, இந்தியா அதிக மனிதவளம் கொண்டவையாக இருப்பதாலே எதிர்காலத்தில் வர்த்தகத்தில் மிகப்பெரிய சக்தியாக இருக்கின்றன.
எந்தத் துறையாக இருந்தாலும் மனித வளம் முக்கியம். இளைஞர் வளம் அதிமுள்ள நம் நாட்டின் எதிர்கால வளர்ச்சி நிச்சயமாக சாத்தியமே. இதனை கருத்தில் கொண்டு நாம் புதிது புதிதாகச் சிந்தித்து வளர்ச்சிக்கு உதவவேண்டும். சமுதாயத்தோடு கூடிய வளர்ச்சியாக நமது வளர்ச்சி அமையவேண்டும் என்றார்.
இந்த விழாவில், சிவில் 175, மெக்கானிக் 170, இசிஇ 170, சிஎஸ்இ 150, ஐடி 140, ஆர்க்கியாலஜி 70, எம்சிஏ 55 என மொத்தம் 1,100 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
தொழிலதிபர் ஹரிதியாகராஜன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலைத் தலைவர் எஸ்.ரத்தினவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக தியாகராஜர் பொறியியல் கல்லூரி முதல்வர் வி.அபய்குமார் வரவேற்றார். கணினி அப்ளிகேசன் துறை தலைவர் பேராசிரியர் எஸ்.பார்த்தசாரதி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.