மதுரை

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கூடுதல் அமர்வுகள் குறித்து பரிசீலனை: தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி

DIN

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கூடுதல் அமர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை கவனத்தில் கொள்ளப்படும் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.
  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்குரைஞர்கள் சங்கம்(எம்.ஏ.ஹெச்.ஏ.ஏ) சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் 13- ஆவது ஆண்டு விழா மற்றும் தமிழ் இலக்கியச் சோலை அமைப்பின் துவக்கவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பங்கேற்றுப் பேசியது:
   வழக்குகளை விரைந்து முடிப்பதில் மதுரைக் கிளை சிறப்பாக செயல்படுகிறது. இங்கு பணியாற்றும்  நீதிபதிகளும் சிறப்பான தீர்ப்புகளை வழங்கி வருகின்றனர். கடந்த சில மாதங்களில் வெளியான முக்கியமான தீர்ப்புகள் அனைத்தும் மதுரைக் கிளையில் பிறப்பிக்கப்பட்டவையே.
 நீதிபதிகளுக்கு வழக்குரைஞர்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே சிறப்பான தீர்ப்புகளை வழங்க முடியும். தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பதை கவனத்தில் கொண்டு நீதிபதிகளும், வழக்குரைஞர்களும் செயல்பட வேண்டும். நீதித்துறையின் மாண்பைக் காக்க நாம் அனைவரும் கடுமையாக உழைப்பது அவசியம்.  சென்னை உயர்நீதிமன்றத்தைப் போலவே, மதுரைக் கிளையும் எனக்கு முக்கியமானது தான். இதில் பாரபட்சம் காட்டுவதற்கு ஏதும் இல்லை. குடும்பத்தின் தலைவர் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், அனைவருக்கும் சமமான அக்கறையை வெளிப்படுத்துவார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் வழக்குரைஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். இதில் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும். மதுரைக் கிளையில் கூடுதல் அமர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்று வழக்குரைஞர்கள் பல நாள்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தக் கோரிக்கை நிச்சயம் கவனத்தில் கொள்ளப்படும் என்றார்.
 சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நிர்வாக நீதிபதி கே.கே.சசிதரன், நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், நீதிபதி டி.ராஜா, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நீதிபதி ஜெ.நிஷாபானு, வழக்குரைஞர் சங்கத் தலைவர் க.பெ.தியாகராஜன், செயலர் இரா.வி.பாரிராசன், இணைச்செயலர் வே.ச.கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT