மதுரையில் பள்ளி அருகே கஞ்சா விற்ற இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவர்களிடமிருந்து 4.50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மதுரை மேலப்பொன்னகரம் கோமஸ்பாளையம் பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு கஞ்சா விற்கப்படுவதாக கரிமேடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சார்பு-ஆய்வாளர் ஜோசப் ரவிச்சந்திரன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பையுடன் சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதை அடுத்து, அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில், கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
அதையடுத்து, இருவரையும் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். அவர்கள், மதுரை அச்சம்பத்து லாலாசத்திரம் காலனியை சேர்ந்த தங்கபாண்டி (38) மற்றும் காளவாசல் பாண்டியன் நகரைச் சேர்ந்த பொன்னாங்கன் (28) என்பதும், பொன்னகரம் பகுதியில் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. பின்னர், போலீஸார் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 4.50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.