மதுரை

ஜூன் 5 முதல் மதுரையில் குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்க மாநகராட்சி முடிவு: சாலையில் கொட்டினால் அபராதம்

DIN

மதுரை மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள், வணிக நிறுவனங்களிடம் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம்பிரித்து பெறும் நடைமுறை ஜூன் 5 முதல் நடைமுறைக்கு வருகிறது.
 குப்பைகளைத் தரம் பிரிக்காமல் வழங்கினாலோ, சாலையில் கொட்டினாலோ அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக உணவக உரிமையாளர்கள், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், சாலையோர வியாபாரிகள் ஆகியோருடனான கலந்துரையாடல் கூட்டம் மாநகராட்சி கருத்தரங்க அறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரி பேசியது:தூய்மை பாரத இயக்க திட்டத்தின்கீழ் பாலிதீன் பைகளைத் தடை செய்தல், திறந்தவெளி கழிப்பிடங்களைத் தவிர்த்தல் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஜூன் 5 முதல், குப்பைகளைத் தரம் பிரித்து சேகரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதன்படி, உணவகம், விடுதி, வணிக நிறுவனங்கள், சாலையோரக் கடைகள் மற்றும் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரித்து துப்புரவுப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.
தற்போது மாநகராட்சிப் பகுதியில் நாளொன்றுக்கு 800 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இவற்றைத் தரம் பிரித்து வழங்குவதால், மறுசுழற்சி செய்வதற்கும், சுற்றுச்சூழலுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
நாளொன்றுக்கு 100 கிலோவுக்கு மேல் குப்பைகள் சேகரமாகும் உணவகங்கள், வணிக நிறுவனங்கள், குடியிருப்போர் சங்கங்கள் பச்சை மற்றும் நீல நிறங்களில் குப்பைத் தொட்டிகளை வாங்கி, பச்சை நிறத் தொட்டியில் மக்கும் குப்பைகளையும், நீலநிறத் தொட்டியில் மக்காத குப்பைகளையும் சேகரித்து துப்புரவுப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும். மக்கும் குப்பைகளை தங்களது பகுதியிலேயே இயற்கை உரம் தயாரித்து பூங்காக்களுக்கு உரமாகப் பயன்படுத்தலாம்.
 தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளைச் சேகரிக்க மாநகராட்சி சார்பில் 3 சக்கர சைக்கிள்களில் பச்சை மற்றும் நீல நிற டப்பாக்கள் வைக்கவும், மாநகராட்சி குப்பைத் தொட்டிகளில் வண்ணம் பூசவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 5 முதல் மாநகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்துத் தரப்பினரும் தரம் பிரித்து அளிக்க வேண்டும். அவ்வாறு தராதவர்கள், சாலைகளில் குப்பை கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்படும். மாநகராட்சியால் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிப்பது, எரிவாயு தயாரிப்பு, பிளாஸ்டிக் பொருள்கள் மறுசுழற்சி செய்வது ஆகியவற்றுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
 மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்ராகவன், உதவி ஆணையர் பழனிசாமி, மதுரை உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் குமார், செயலர் ராமச்சந்திரன், மடீட்சியா தலைவர் எல்.முராரி மற்றும் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT