மதுரை

மாநகரக் காவல்துறையினருக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் இலவச மருந்து, மாத்திரைகள்: காவல் ஆணையர் வழங்கினார்

DIN

மதுரை மாநகரக் காவல் துறையினருக்கு இலவச மருந்து மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
மதுரை மாநகரக் காவல் துறையில் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள், சார்பு -ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு-ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள், காவலர்கள் என பல்வேறு நிலைகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். பணிச்சுமை, தூக்கமின்மை, முறையான உணவுப் பழக்கமின்மை இவற்றால் பெரும்பாலான காவல்துறையினர் எளிதில் நோய்பாதிப்பு ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். இவர்களில் பலர் நோயின் பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கு தினசரி மருந்து, மாத்திரைகளை அவசியம் உட்கொள்ள வேண்டியுள்ளது. இவர்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவல்துறை மருத்துவமனையில் வழங்கப்பட்டு வந்தது. அதில் காவலர்களுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்து, மாத்திரைகள் அனைத்தும் கிடைக்காமல், அவற்றை வெளியில் வாங்கினர். இதற்காக மாதம் குறைந்தது ரூ.1,500
முதல் ரூ.3,000 வரை செலவழித்து வந்தனர்.
இதுதொடர்பாக மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து காவலர்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளை காவல் ஆணையர் அலுவலகம் மூலமாக வழங்குமாறு அவர் உத்தரவிட்டார். மேலும் காவலர்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரை பட்டியலைப் பெற்று கொள்முதல் செய்வதற்கு மாநகர மதுவிலக்கு கூடுதல் துணை ஆணையர் முருகேஷ் தலைமையில் குழுவும் அமைத்து உத்தரவிட்டார்.
 இதையடுத்து மாநகக் காவல்துறையில் தொடர்ச்சியாக மருந்து, மாத்திரைகள் உட்கொள்ளும் காவலர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. மேலும் காவலர்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள், அவர்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் மருத்துவர்களின் பரிந்துரையின்படி பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டன.
 இதையடுத்து மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் காவலர்களுக்கு மருந்து, மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பங்கேற்று காவலர்களுக்கு இலவச மருந்து, மாத்திரைகளை வழங்கினார். இதில் 85 -க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், துணை ஆணையர்கள் சசிமோகன், ஜெயந்தி, ஈஸ்வரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், தினமணி செய்தியாளரிடம் கூறியது:
 மாநகரக் காவல்துறையினருக்கு போலீஸ் மருத்துவமனை மூலம் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வந்தது. அதை தற்போது அனைத்துக் காவலர்களும் பயன்படுத்தும்படி விரிவுபடுத்தியுள்ளோம். இதன் மூலம் காவலர்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் மாதம் தவறாமல் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

முஸ்லிம்களை ‘பகடைக்காயாக’ காங்கிரஸ் பயன்படுத்துகிறது: பிரதமா் மோடி

வெள்ளை டீ-ஷா்ட் ரகசியம்? ராகுல் விளக்கம்

SCROLL FOR NEXT