நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டவர் மதுரை நீதிமன்றத்தில் சரண்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபர் மதுரை நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபர் மதுரை நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள மத்தம்பாலை பகுதியில் கே.நிர்மலன் என்பவர், தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிறுவனத்தில் தமிழகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தலா ரூ. 3 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை முதலீடு செய்திருந்தனர்.
இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நிறுவனத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் நிறுவனம் திறக்கப்படவில்லை. மேலும், நிறுவனத்தின் வெளியே கேரள மாநில வழக்குரைஞர் ஒருவர் சார்பில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. அதில், இந்நிறுவனம் திவாலானதாகவும், இதையடுத்து நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்களை கேரள மாநில நீதிமன்றம் மூலம் விற்பனை செய்து, வாடிக்கையாளர்களுக்கு உரிய தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள், நிறுவனத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் மற்றும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீஸார் நிர்மலன் மீது வழக்குப்பதிவு செய்து, நிறுவன பங்குதாரர்களான ஐந்து பேரை கைது செய்து விசாரித்தனர். மேலும், நிதி நிறுவனத்தில் போலீஸார் நடத்திய சோதனையில் ரூ. ஒரு கோடியும், ஏழு கிலோ தங்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் உள்ள முதலீட்டாளர்கள் நல சிறப்பு நீதிமன்றத்தில் தனியார் நிதி நிறுவன உரிமையாளர் கே.நிர்மலன் புதன்கிழமை சரணடைந்தார். இவரை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி எம்.மீரா சுமதி உத்தரவிட்டார்.