வங்கியில் ரூ.71 கோடி கடன் பெற்று மோசடி செய்தவர்கள் மீதான வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்
பருப்பு உள்ளிட்ட தானியங்கள் இருப்பில் இருப்பதாகக் கூறி வங்கியில் ரூ.71 கோடி கடன் பெற்று மோசடி செய்தவர்கள் மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
பருப்பு உள்ளிட்ட தானியங்கள் இருப்பில் இருப்பதாகக் கூறி வங்கியில் ரூ.71 கோடி கடன் பெற்று மோசடி செய்தவர்கள் மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குடோன்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பருப்பு உள்ளிட்ட தானிய மூட்டைகள் இருப்பில் இருப்பதாகக் கணக்கு காட்டி மதுரை, விருதுநகர் லட்சுமி விலாஸ் வங்கியில் 31 பேர் ரூ.71 கோடியே 62 லட்சத்து 99 ஆயிரம் கடன் பெற்றனர். இந்தக் கடன் முறையாக திரும்பிச் செலுத்தப்படவில்லை.
இந்நிலையில் தானியங்கள் வைக்கப்பட்டிருந்த குடோன்களில் வங்கி அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் தானியங்கள் இருப்பதாக கூறப்பட்ட மூட்டைகளில் நெல் உமி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து நெல் உமி மூட்டைகளை தானிய மூட்டைகளாக கணக்கு காட்டி கடன் பெற்று மோசடி செய்ததாக 31 பேர் மீதும் வங்கி சார்பில் விருதுநகர், மதுரை குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் நடவடிக்கை எடுக்காத நிலையில் இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வங்கியின் உதவி துணைத் தலைவர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர் வாதிடுகையில், மனுதாரரின் புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அதில், மனுதாரரின் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லாதது தெரியவந்துள்ளது. இதனால் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, பெரிய அளவில் மோசடி நடைபெற்றுள்ளது தொடர்பாக போலீஸார் விசாரிக்க மறுப்பது சரியல்ல. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிப்பது தான் சரியாக இருக்கும்.
வங்கி நிர்வாகம் அளித்த புகார் மற்றும் ஆவணங்களை போலீஸார் உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். புகார் தொடர்பாக சிபிஐ பொருளாதார குற்றத்தடுப்பு எஸ்பி விசாரிக்க வேண்டும். இந்த விசாரணை தொடர்பான அறிக்கையை டிசம்பர் 5 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.