சித்திரை திருவிழா: கள்ளழகர் செல்லும் இடத்தை தெரிந்துகொள்ள புதிய வசதி
மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் செல்லும் இடங்களை செல்லிடப்பேசி மூலம் பொதுமக்கள் தெரிந்துகொள்ள
மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் செல்லும் இடங்களை செல்லிடப்பேசி மூலம் பொதுமக்கள் தெரிந்துகொள்ள மதுரைக்காவலன் செயலியில் புதிய வசதி செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரை ஊரகக்காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை மாவட்ட காவல்துறை துணைத்தலைவர் மற்றும் ஊரகக்காவல் கண்காணிப்பாளரால் "மதுரைக்காவலன்' என்ற செல்லிடப்பேசி செயலி கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மக்களின் நலன் கருதியும், போக்குவரத்து இடையூறுகளை கருத்தில் கொண்டும், இச்செயலியில் "டிராக் அழகர்' என்ற புதிய அம்சம் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அழகர்கோயிலில் இருந்து கள்ளழகர் புறப்படுவது தொடங்கி, மீண்டும் அழகர்கோயில் செல்வது வரை கள்ளழகர் எந்தெந்த இடங்களில் இருக்கிறார் என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும். எனவே, பொதுமக்கள், தங்கள் ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசியில் பிளே ஸ்டோர் மூலம் மதுரைக்காவலன் செயலியை தரவிறக்கம் செய்து கள்ளழகர் இருக்குமிடத்தை தெரிந்து கொள்ளலாம். ஏற்கெனவே மதுரைக்காவலன் செயலியை பதிவிறக்கம் செய்தவர்கள் அதனை மீண்டும் அப்டேட் செய்து டிராக் அழகர் இணைப்பை பயன்படுத்தலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.