பக்ரீத் பண்டிகை: மாடு, ஒட்டக இறைச்சி விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு!
மாடு, ஒட்டக இறைச்சி விற்பனையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து...
உத்தரப் பிரதேசத்தில் மாடு, ஒட்டகம் போன்ற இறைச்சிகளை விற்பனை செய்ய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பக்ரீத் பண்டிகையையொட்டி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் இன்று (மே 25) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இறைச்சி விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
இதன்படி, மாடு மற்றும் ஒட்டகத்தை பலி கொடுக்க தடை செய்யப்பட்டுள்ளது. முன்னரே ஒப்புதல் வழங்கப்பட்ட இடங்களில் மட்டுமே பலி கொடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய யோசனைகள் அல்லது மரபுகளை பின்பற்றுவதை ஊக்குவிக்கக் கூடாது என்றும் பாரம்பரிய இடங்களில் மட்டுமே தொழுகை நடத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனுமதி அளிக்கப்பட்ட இறைச்சிக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதல் விலங்குகள் இருக்கக் கூடாது; திறந்த வெளியில் இறைச்சி விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளுக்குப் புறம்பாக திறக்கப்படும் இறைச்சிக் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எந்தவொரு சூழலிலும் சாலைகளை மறிப்பது அனுமதிக்கப்படாது எனவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.