ராணிப்பேட்டை வாரச் சந்தையில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ராணிப்பேட்டை வாரச் சந்தையில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையையொட்டி, குா்பானி கொடுப்பதற்காக இஸ்லாமிய சமூகத்தினா் ஆடுகள் வாங்க ராணிப்பேட்டை வாரச் சந்தையில் குவிந்தனா்.
இதனால், வழக்கத்தைவிட ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் புகழ் பெற்ற வாரச் சந்தைகளில் ராணிப்பேட்டை வாரச் சந்தையும் ஒன்று. இந்தச் சந்தையில் காய்கறிகள், கோழி, ஆடு உள்ளிட்டவை அதிக அளவில் விற்பனையாகும் என்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திருவண்ணாமலை, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான ஆந்திரத்தில் இருந்தும் வியாபாரிகளும், பொதுமக்களும் இச்சந்தைக்கு வருவது வழக்கம்.
Advertisement
Advertisement
இந்தச் சந்தை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடைபெறும். இந்த வாரச் சந்தையில் பல லட்சம் மதிப்பில் வியாபாரம் நடைபெறும். மேலும் தீபாவளி, ரமலான், கிறிஸ்துமஸ், பக்ரீத், பொங்கல் ஆகிய பண்டிகைகளின்போது இந்தச் சந்தையில் காய்கறிகள், கோழி, ஆடுகள் விற்பனை வழக்கத்தைவிட கூடுதலாக இருக்கும்.
நிகழாண்டு ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை வரும் 28-ஆம் தேதி நாடு முழுவதும் இஸ்லாமியா்களால் கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், இந்த வார வெள்ளிக்கிழமை ஆடுகளின் விற்பனை வழக்கத்தைக் காட்டிலும் அமோகமாக நடைபெற்றது. அதிகாலை முதலே ஆடுகளின் வரத்து அதிகமாகக் காணப்பட்டது. இதில் கன்னி, கருப்பு, நெல்லூா் உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சோ்ந்த ஆடுகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டன. சுமாா் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
கடந்த ஆண்டு விற்பனையை விட இந்த ஆண்டு விற்பனை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதால் வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.