அலட்சியம்: அரசு மருத்துவமனையில் மீண்டும் தீ விபத்து
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குப்பைக் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்காததால், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தீப்பற்றி எரிந்தது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குப்பைக் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்காததால், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தீப்பற்றி எரிந்தது.
அரசு ராஜாஜி மருத்துவமனையின் பின்புற வாசலில் பிணவறை உள்ளது. அதன் எதிரே மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட அதிகமான குப்பைகள் கொட்டி குவித்து வைக்கப்பட்டுள்ளன. பல மாதங்களாக அகற்றப்படாததால், மலைபோல் குவிந்திருந்த குப்பையிலிருந்து துர்நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேட்டை பரப்பியது.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், குப்பைகளை அகற்ற நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த குப்பை குவியலில் மர்ம நபர்கள் தீ வைத்து விட்டுச் சென்றுவிட்டனர். இதனால் தீப்பற்றி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.
தகவலின்பேரில் அங்கு வந்த தல்லாகுளம் தீயணைப்பு நிலைய வீரர்கள், 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதையடுத்தும், எஞ்சிய குப்பைகளை அகற்றவும் மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், எஞ்சிக் கிடந்த குப்பைக் குவியலில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தீப்பிடித்து எரிந்தது. மீண்டும் தீயணைப்புப் படையினர் சென்று தீயை அணைத்தனர். அப்போது தீயணைப்பு வீரர்கள், குப்பைக் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு, மருத்துவமனை நிர்வாகத்தை வலியுறுத்திச் சென்றனர்.